ஓடிடி தளங்களிலும் தணிக்கை வேண்டும் என்றும், நல்ல உள்ளடக்கம் கொண்ட கண்டென்ட்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.


தகவல்  தொழில்நுட்ப வளர்ச்சியில் கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி தளங்களின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், ஓடிடி தளங்களின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்தது.


ஒருபுறம் மேற்கத்திய நாடுகளைப்போல் ஓடிடி சீரிஸ்களுக்கு இங்கும் விசிறிகள் அதிகரித்துள்ள நிலையில், மற்றொருபுறம் ஓடிடி கண்டென்ட்கள் ஆபாசம் மற்றும் வன்முறையை ஊக்குவிப்பதாகவும் ஓடிடி கண்டென்ட்களுக்கும் தணிக்கை தேவை என்றும் தொடர்ந்து குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.


ஆனால் ஓடிடி கண்டென்ட்களுக்கென தனியாக தணிக்கைக் குழு ஒன்று இதுவரை இல்லாத நிலையில், முன்னதாக ஓடிடி தளங்களில் வெளியாகும் ஆபாசத்தையும் தவறான நோக்கம் கொண்ட கண்டெண்ட்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார்.


முன்னதாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான ராணா நாயுடு தொடரில் ஆபாசம் மேலோங்கி இருப்பதாக எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், ஓடிடி தளங்களுக்கு தணிக்கை வேண்டுமா என்பது குறித்த விவாதங்களில் எழுந்து வருகின்றன.


இந்நிலையில், இதுகுறித்து நடிகர் சல்மான் கான் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய நடிகர் சல்மான் கான், ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வேண்டும் என்றும், நல்ல உள்ளடக்கம் கொண்ட கண்டென்ட்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். 


”உள்ளடக்கம் தூய்மையாக இருக்கும்போது, அது சிறப்பானதாக இருக்கும். இந்த நாட்களில் எல்லாமே போனில் வந்து விடுகின்றன. 15-16 வயதுள்ள குழந்தைகளும் இதைப் பார்க்கலாம். உங்கள் பெண் தனது தொலைபேசியில் படிப்பதற்கு பதிலாக இதுபோன்ற உள்ளடக்கத்தைப் பார்ப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா?


கண்டென்ட் எவ்வளவு தூய்மையாக இருக்கிறதோ, பார்வையாளர்களின் எண்ணிக்கை அவ்வளவு கூடும். தற்போது நாம் நல்ல உள்ளடக்கங்களைத் தரத் தொடங்கியுள்ளோம்” எனப் பேசியுள்ளார்.


தொடர்ந்து நடிகர்களுக்கு அறிவுரை வழங்கிய சல்மான் கான், “நீங்கள் உங்கள் உடலை வெளிப்படையாகக் காண்பிப்பது, இண்டிமேட் காதல் காட்சிகள் என என அனைத்தையும் செய்துவிட்டீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் வீட்டுக்குள் நுழையும் போது, ​​உங்கள் வாட்ச்மேன் நீங்கள் நடித்ததைப் பார்ப்பதை பார்க்கிறீர்கள். இது உங்கள் பாதுகாப்புக்கு நல்லதா? நாம் இந்தியாவில் இருக்கிறோம்” என சல்மான் கான் பேசியுள்ளார்.


சல்மான் கானின் இந்தப் பேச்சு கவனமீர்த்து பாலிவுட்டில் பேசுபொருளாகி வருகிறது.


மேலும் படிக்க: Watch Video: “உங்களை பார்க்கணும்ன்னு தோணுச்சு.. அதான் வந்தேன்”.. விஜய் சேதுபதியை சந்தித்த குழந்தை..வைரலாகும் வீடியோ..!