நடிகர் விஜய் சேதுபதி குழந்தையுடன் பேசும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அது இணையவாசிகள் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. 


தமிழ் சினிமாவில் துணை வேடங்களில் நடித்து வந்த நடிகர் விஜய் சேதுபதி, 2010 ஆம் ஆண்டு வெளியான “தென் மேற்கு பருவக்காற்று” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த அவர், ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் வில்லனாக தோன்றினார். பின்னர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் வில்லனாக தோன்றி பாராட்டைப் பெற்றார்.


தயாரிப்பாளராகவும் சில படங்களை விஜய் சேதுபதி தயாரித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளிலும் கிடைக்கும் கேரக்டர்களில் நடித்து ஸ்கோர் செய்யும் விஜய் சேதுபதி நடிப்பின் அண்மையில் விடுதலைப் படம் வெளியாகியிருந்தது. 


வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி  வெளியான இப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகியிருந்தது.  இந்த படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்த நிலையில், போராளியாக “வாத்தியார்” கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். முதல் பாகத்தில் அவரது காட்சிகள் சில நிமிடங்களே வந்த நிலையில் இரண்டாம் பாகம் முழுக்க விஜய் சேதுபதியின் மையமாக நகரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. 
 
தொடர்ந்து கமர்ஷியல் ஹீரோவாக நடித்து வரும் விஜய் சேதுபதி, அவ்வப்போது கிடைக்கும் கேரக்டர் ரோல்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்துவார். அவரின் கேரக்டர் ரோலில் சிறந்த படமாக “விடுதலை” படம் இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விடுதலை படம் பார்த்த பலரும் சூரி, விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் பாராட்டி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 






இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த உரையாடல் பின்வருமாறு: 


குழந்தை: (தனது அப்பாவை குறிப்பிட்டு) வீட்டுக்கு போனாதான் வேலைக்கு போக முடியும்
விஜய் சேதுபதி: எங்க வேலை பாக்குறாங்க? 
குழந்தை: கட்டிடத்துல வேலை பாக்குறாங்க
விஜய் சேதுபதி: வீட்டுல நீங்க ஒரே பையனா? கூட பொறந்தது வேற யாரும் இருக்காங்களா? 
குழந்தை: ஆ.. ஆயாம்மா இருக்காங்க.. 
விஜய் சேதுபதி: ஆயாம்மா உன் கூட பொறந்தவங்களா? அவங்களுக்கு என்ன வயசாகுது? 
குழந்தை: அவங்களுக்கு 2 வயசாகுது.. எனக்கு 3 வயசாகுது.. 
விஜய் சேதுபதி: ஆயாம்மாவை விட நீ பெரியவனா? 
குழந்தை: ஆம்
விஜய் சேதுபதி: எதனால உங்களுக்கு என்னை வந்து பார்க்கணும் தோணுச்சு? 
குழந்தை: உங்களை பார்க்கணும் தோணுச்சு


இப்படியான உரையாடலுக்குப் பிறகு அந்த குழந்தைக்கு சாக்லேட் கொடுத்த விஜய்சேதுபதி, அதற்கு பரிசாக அன்பு முத்தங்களையும் பெற்றுக் கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.