நடிகர் சல்மான் கான் (Salman Khan) வழக்கில் கைதானவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பரபரப்பைக் கிளப்பிய துப்பாக்கிச்சூடு


கடந்த ஏப்.14ஆம் தேதி பாந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் நிகழ்த்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை பாந்த்ராவில் அமைந்துள்ள சல்மான் கான் வீட்டருகே அதிகாலை 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த விக்கி குப்தா, சாகர் பால் ஆகிய இரு நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நிகழ்த்தி விட்டு தப்பிச் சென்றனர்.


சல்மான் கான் வீட்டருகே வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்ட நிலையில், இதில் உயிர்ச்சேதமோ, காயங்களோ எதுவும் ஏற்படவில்லை.  தொடர்ந்து சிசி டிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்ததை அடுத்து, குஜராத் மாநிலம், பூஜ் பகுதியில், விக்கி குப்தா, சாகர் பால் எனும் இந்த இரு நபர்களை மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.  தொடர்ந்து இந்த இருவருக்கும் துப்ப்பாக்கிகள் சப்ளை செய்ததாக அனுஜ் தாபன், சோனு சந்தர் எனும் இருவரும் கைது செய்யப்பட்டு நால்வரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.


உயிரிழந்த விசாரணைக் கைதி


விசாரணைக் கைதிகளாக இவர்கள் சிறையில் இருந்த நிலையில், இன்று இவர்களில் அனுஜ் தாபன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். மும்பை சிறப்புப் பிரிவு போலீசாரின் காவலில் இருந்த அனுஜ் தாபன் தற்கொலை முயற்சி மேற்கொண்டதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.


பஞ்சாப்பைச் சேர்ந்த நிழல் உலக தாதாவும் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் பிரபல ரவுடியுமான லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரன் அன்மோல் பிஷ்னோய் முன்னதாக இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்நிலையில், சல்மான் கான் வீட்டின் முன் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் தற்கொலை முயற்சியால் உயிரிழந்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. அப்படி தற்கொலை எண்ணங்களும், மன அழுத்த எண்ணங்களும் மேலோங்கினால், அவற்றிலிருந்து விடுபட கீழ்க்காணும் எண்ணுக்கு எங்களை அழைத்து உதவி பெறவும்.


மாநில உதவி மையம் :104


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை,


ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)