பிரபல நடிகரான சலிம் கவுஸ் இன்று மும்பையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 70. அவரது இறுதிச் சடங்குகள் இன்று காலை நடந்தது.
இது குறித்து அவரது மனைவி அனிதா சலிம் கூறும் போது, “ கடந்த புதன்கிழமை மார்பகத்தில் ஏற்பட்ட வலியால் அவதியுற்று வந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை உயிரிழந்தார். அவர் கஷ்டப்படவில்லை. அவர் யாரையும் சார்ந்திருக்க விரும்பவில்லை. அவருக்கு சுயமரியாதை அதிகம். பல வேடங்களில் நடித்த அவருக்கு தற்காப்புக்கலை தெரியும். நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வந்த அவருக்கு சமைப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது என்று கூறினார்.
1978 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஸ்வர்க் நரக் படத்தில் நடித்ததன் மூலம் தனது திரை வாழ்கையை தொடங்கிய அவர் ஹிந்தியில் பட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் விஜய்காந்த் நடித்த ‘சின்ன கவுண்டர்’ மணிரத்னம் இயக்கிய ‘திருடா திருடா’ அஜித்தின் ‘ரெட்’ விஜயின் ‘ வேட்டைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.