கே.ஜி.எஃப் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப் படும் நிலையில், இப்படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
கே.ஜி.எஃப்
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் கன்னட சினிமாவை உலக அளவில் பேசவைத்தது. இந்தப் படத்தில் ராக்கி பாயாக நடித்த நடிகர் யஷ் இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் 2 பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை செய்து சுமார் 1,200 கோடியை வசூலித்தது.
கேஜிஎஃப் 2 திரைப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மேலும் மாளவிகா அவினாஷ், பிரகாஷ் ராஜ், ஈஸ்வரி ராவ் மற்றும் சரண் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்தினை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வரும் நிலையில் தற்போது மூன்றாம் பாகத்தின் கதை என்னவாக இருக்கும் என்று இணையதளத்தில் விவாதித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
கே.ஜி.எஃப் 3
இயக்குநர் பிரஷாந்த் நீல் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பைத் தொடங்க இருப்பதாகவும், 2025ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. இந்தப் படம் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்றும் கதைப்படி 1978 முதல் 1981 ஆண்டில் ராக்கி பாய் அமெரிக்கா மற்றும் மேலும் 16 நாடுகளில் செய்த சாகசங்களை மையப்படுத்தியதாக இருக்கும் என்றும் இணையதளத்தில் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஏற்கெனவே பிரஷாந்த் நீல் இயக்கியிருக்கும் சலார் திரைப்படத்திற்கும் கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பிருக்கும் என்கிற ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். கே.ஜி.எஃப் மூன்றாம் பாகம் இந்த வரிசையில் கடைசி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சலார்
பிரஷாந்த் நீல் இயக்கி பிரபாஸ் நடித்திருக்கும் திரைப்படம் சலார். ஷ்ருதி ஹாசன், பிருத்விராஜ் ஜெகபதி பாபு இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம், செப்.28 வெளியாகும் என ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பின் பல்வேறு காரணங்களால் படத்தில் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.