1.65 லட்சம் மரக்கன்றுகள் முற்றிலும் இலவசம்- விவசாயிகளுக்கு தூத்துக்குடி ஆட்சியர் அழைப்பு

இத்திட்டத்தில் தேக்கு, செம்மரம், கருங்காலி, வேங்கை, சந்தனம், மஞ்சள் கடம்பு, ஈட்டி, மலைவேம்பு, மகோகனி, மருது மற்றும் பூவரசு போன்ற மரக்கன்றுகளும், மருத்துவ மதிப்புள்ள வேம்பு, புங்கன், புளி, மருது, தான்றிக்காய், பெருநெல்லி மற்றும் வில்வம் போன்ற மரக்கன்றுகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

Continues below advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்கும் முயற்சியாக வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு 1.65 லட்சம் மரக்கன்றுகள் முழு மானியத்துடன் வழங்கப்படுகிறது. மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement




இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2023-2024-ம் ஆண்டு வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு 1.65 லட்சம் மரக்கன்றுகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மரக்கன்றுகள் மாநிலத்தின் வனப்பரப்பை 23.6 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்திட மாநில அரசின் முக்கிய முன்னெடுப்பான பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தில் இருந்து தரமான மரக்கன்று உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.


விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் நடவு செய்திட அதிகபட்சமாக ஏக்கருக்கு 50 மரக்கன்றுகள் மற்றும் விவசாய நிலங்களில் குறைந்த செறிவில் நடவு செய்திட அதிகபட்சமாக ஏக்கருக்கு 160 மரக்கன்றுகள் வழங்கப்படும். இம்மரக்கன்றுகள் வளர்ந்து அறுவடை செய்யும் போது வனத்துறையின் அனுமதியை விவசாயிகள் எளிதில் பெறும் வகையில் நடவு செய்த மரக்கன்றுகள் அனைத்தும் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


இத்திட்டத்தில் தேக்கு, செம்மரம், கருங்காலி, வேங்கை, சந்தனம், மஞ்சள் கடம்பு, ஈட்டி, மலைவேம்பு, மகோகனி, மருது மற்றும் பூவரசு போன்ற மரக்கன்றுகளும், மருத்துவ மதிப்புள்ள வேம்பு, புங்கன், புளி, மருது, தான்றிக்காய், பெருநெல்லி மற்றும் வில்வம் போன்ற மரக்கன்றுகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன் பெறவிரும்பும் விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது உழவன் செயலி வாயிலாகவோ பதிவுசெய்து தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரின் பரிந்துரையின்படி அருகில் வனத்துறை மத்திய நாற்றங்கால்களில் மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு, கச்சனாவிளை, ஊத்துப்பட்டி, விளாத்திகுளம், மற்றும் சாலிகுளம் ஆகிய இடங்களில் உள்ள வனத்துறை மத்திய நாற்றங்கால்களில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இவைகளை விவசாயிகள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பாக மேலும் விபரங்களை அறிய விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola