சாய் பல்லவி என்றவுடன் முதலில் உளத்தில் இனிக்கும் பாடல் வரிகள்... மலரே நின்னை காணாதிருந்நால், மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே...


நிவின் பாலியுடன் ஜோடி போட்டு அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்த பிரேமம் படத்தில் வரும் பாடல் வரிகள்தான் இவை. 


மலர் என்றவுடன் சாய் பல்லவி என்ற பெயரே நம் மனதிற்கு நினைவுக்கு வரும் அளவுக்கு அல்ஃபோன்ஸ் புத்திரன் நம்மை அந்தக் கதாபாத்திரத்தில் கட்டிப்போட்டிருப்பார். அவரது கன்னத்தில் உள்ள பருக்கள் தான் அத்தனை அழகுக்கும் காரணம் என்று சொல்லும் அளவுக்கு கறை நல்லது என்பது போல் பரு நல்லது என்றும் டீன் ஏஜ் பிள்ளைகள் தங்களின் தோற்றத்தை ஏற்றுக் கொள்ளக் காரணமாக இருந்தவர் சாய் பல்லவி.


சாய் பல்லவி, ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரம் ஒன்றில் நடிக்க அவருக்கு ரூ.2 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாம். ஆனாலும் கூட அவர் அந்த விளம்பரத்தைப் புறக்கணித்திருந்தார். அதற்கான காரணத்தையும் அவர் கூறியிருந்தார். எனக்கு ஒரு தங்கை உண்டு. பெயர் பூஜா. அவருக்கும் எனக்கும் ஐந்து வயது வித்தியாசம். அவரும் இப்போது சினிமாவில் நடிக்கிறார்.


ஆனால் சிறு வயதில் அவருக்கு ஒரு காம்ப்ளக்ஸ் இருந்தது. என்னைவிட அவர் சற்று நிறம் குறைவாக இருப்பதாக அவர் கருதினார். அதனால் வருத்தப்படுவார். அப்போது ஒருமுறை அவரிடம் என் அம்மா நீ நிறைய காய்கறி, பழங்கள் சாப்பிடு நீயும் என் நிறத்துக்கு வருவாய் என்று கூறினேன்.


அப்போதெல்லாம் அவருக்கு காய், பழம் பிடிக்காது. அவர் அதை சாப்பிட ஊக்குவிக்க இப்படியொரு பொய் சொன்னேன். ஆனால் அவர் அதை நம்பி சாப்பிட ஆரம்பித்தார். நிறத்துக்காக ஒரு நபர் தனக்குப் பிடிக்காததைக் கூட செய்வாரா? என்ற கேள்வியும், சமூகம் சுமத்திவைத்துள்ள கற்பிதங்களும் எனக்கு அப்போது புரிந்தது. மனம் வலித்தது. அதனால் தான் நான் வளர்ந்த பின்னர் எனக்கு ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரம் வந்தபோது அதை நான் புறக்கணித்தேன். இது முழுக்க முழுக்க ஒரு தனிப்பட்ட சாய்ஸ் என்றே கூறலாம்.




பிரேமம் முன் பிரேமம் பின்..


பிரேமம் படத்திற்கு முன்னால் நான் என் முகத்தில் உள்ள பருக்கள் மறைய நூறு நூறு க்ரீம்களை பூசுவேன். சில வேளைகளில் வெளியே செல்வதைக் கூட தவிர்ப்பேன். எல்லோரும் என் கண்ணைப் பார்க்காமல் முகத்தைத் தான் பார்க்கிறார்களோ என்று நினைப்பேன். அந்த அளவுக்கு எனது பருக்களால் எனக்கு தாழ்வு மனப்பான்மை வந்தது. ஆனால் அல்ஃபோன்ஸ் புத்திரன் அதை உடைத்தெறிந்தார்.


நாம் நாமாக இருப்பதுதான் அழகு. அதை எனக்கு உணர்த்தியவர் அல்ஃபோன்ஸ் புத்திரன். மலர் டீச்சராக நடிக்க முடிவெட்டவில்லை, மேக்கப் போடவில்லை ஏன் புருவத்தைக் கூட திருத்தவில்லை.


நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே காட்டினார். என் முகப் பருக்களாலேயே என்னை ரசிப்போர் உருவாகினர். என்னால் சில இளம் பெண்கள், வளரிளம் பிள்ளைகள் கூட தங்கள் மீது நம்பிக்கை வைத்தனர். எனக்காக சமூகம் நிறைய அன்பு தந்தது. அதற்கு நான் ஏதாவது திருப்பிச் செய்ய வேண்டுமல்லவா அதனால் தான் அந்த விளம்பரப் படத்தை புறக்கணித்தேன்.


இவ்வாறு சாய் பல்லவி கூறியுள்ளார்.