ஆசிரியர்கள் தான் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்கள் ஆனால் 'சாட்டை' படம் ஆசிரியர்களுக்கே பாடம் எடுத்தது. ஆசிரியர்களின் பணி எத்தனை புனிதமானது என்பதையும் அதை எப்படியெல்லாம் அலட்சியம் செய்ய கூடாது என்பதையும் மிகவும் அழகாக நெற்றியில் அடித்தாற்போல் சொன்ன திரைப்படம் தான் "சாட்டை" திரைப்படம். 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதியில் வெளியான இந்த திரைப்படம் இன்றோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இயக்குனர் பிரபு சாலமனின் "மைனா"திரைப்படத்தில் அவரிடம் துணை இயக்குநராகி பணிபுரிந்த அன்பழகன் இயக்கிய முதல் திரைப்படம் "சாட்டை".


 



 


பள்ளியை சுற்றிலும் அமைந்த திரைக்கதை :


கண்டிப்பான ஆசிரியராக இருந்தாலும் மிகவும் அன்பான, தோழமையான ஆசிரியராக சமுத்திரக்கனி ஒரு பின்தங்கிய அரசு பள்ளியில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்து அங்கு ஒழுக்கம் இல்லாத ஆசிரியர்களிடம் இருந்து மாணவர்களை எப்படி ஊக்கப்படுத்தி, தேர்ச்சியடைய வைத்து மாவட்டத்திலேயே முதன்மையான பள்ளியாக அந்த பின்தங்கிய அரசு பள்ளியை உயர்த்துகிறார் என்பது தான் திரைக்கதை. 


 


சமுத்திரக்கனியின் பலே நடிப்பு :


இப்படத்தில் தம்பி ராமைய்யா, ஜூனியர் பாலய்யா, யுவன், மஹிமா, பாண்டி மற்றும் பலர் நடித்திருந்தனர். அக்கறை நிரம்பிய ஆசிரியராகவும், ஒழுக்கம் கேட்ட ஆசிரியர்களுக்கு பாடம் கற்பிக்கும் போதும் தனது சிறப்பான நடிப்பால், வசனங்களால் ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்துவிட்டார். தம்பி ராமைய்யாவின் கர்வமான தலைமை ஆசிரியராக அவரின் நடிப்பு பலே சொல்ல வைத்து. மேலும் ரகளை செய்யும் மாணவனாக யுவனின் நடிப்பும், மஹிமாவின் சிறப்பான நடிப்பும் பாராட்டை பெற்றது. ஆசிரியரின் தரங்கெட்ட செயலில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள எடுக்கும் முயற்சிகளில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் நடிகை மஹிமா. 


 


இயக்குனரின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்: 


பள்ளி மாணவர்களை மையாக வைத்து பல படங்கள் வெளிவந்து இருந்தாலும் பள்ளி ஆசிரியர்கள் அதிலும் குறிப்பாக அரசு பள்ளி ஆசிரியர்களின் அலட்சியத்தை பற்றி மிகவும் துணிச்சலாக திரையில் கொண்டு வந்ததற்கு இயக்குனர் அன்பழகனுக்கு பாராட்டுக்கள். சமுத்திரக்கனியின் வசனங்கள் ஒவ்வொன்றும் ஈட்டியை போல உள்ளே ஊடுருவுகிறது. தனது கம்பீரமான தோற்றத்திலும், பரிவான குரலாலும் மாணவர்களை அன்பால் கட்டிப்போட்டு அவர்களின் திறமைகளை வெளி கொண்டு வரும் சீன்களும் கைதட்டல் பெற்றன. ஒரு சில சீன்களில் மட்டுமே வந்தாலும் மனதை வருடி செல்கிறார் ஜூனியர் பாலைய்யா. பள்ளியில் ஏற்படும் இன்பாட்சுவேஷன் காதல் காட்சிகளையும் மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குனர்.  


படத்தின் பிளஸ் பாயிண்ட்:


இசையமைப்பாளர் இமானின் இசை மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவனின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. இமானின் இசையில் "சகாயனே..."பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது. அரசு பள்ளிகளின் அவளை நிலையை எடுத்துரைத்த இப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்தது. இப்படத்தை தொடர்ந்து இதே திரைக்கதையோடு 2019ம் ஆண்டு நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் "ராட்சசி".