கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் “கைதி”. இந்த படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதி அதனை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். படத்தை தயாரித்திருந்தார் எஸ்.ஆர்.பிரபு. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை படமாக்க லோகேஷ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் முதல் பாகத்தில் வெளியான கதை என்னுடையது என கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், அம்மாநில நீதிமன்றம் இரண்டாம் பாகம் எடுக்க தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனது கதையை திருடி படமாக்கியிருப்பதால் எனக்கு நஷ்ட ஈடாக நான்கு கோடியை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கினை விசாரித்த கேரள மாநிலம் கொல்லம் உயர் நீதிமன்றம் கைதி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தடைவிதித்தது . மேலும் பிற மொழிகளில் படத்தை ரீமேக் செய்யவும் நீதிபதிகள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனை தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் ட்ரால் செய்ய துவங்கிவிட்டனர். இயக்குநர் அட்லி மற்றும் முருகதாஸ் உள்ளிட்ட இயக்குநர்கள் கதை திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் , தற்போது லோகேஷ் கனகராஜும் இணைந்துவிட்டாரா என ரசிகர்கள் விளாச தொடங்கிவிட்டனர்.
இந்த குறித்த செய்திகள் வெளியானதை அறிந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார் அதில் “ஒரு வழக்கின் முழு விபரம் கூட அறியாமல் ஒரு இயக்குநரை களங்கப்படுத்தி செய்தி பதிவது கேவலமான செயல். அதை ஒரு செய்தி நிறுவனம் செய்வது அதனினும் மோசமானது. அட்மினுக்கு அறிவுறுத்துங்க ஐயா!” என குறிப்பிட்டுள்ளார். இது தற்போது அதிகமாக ரீட்வீட் செய்யப்படுகிறது.