மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கைவண்ணத்தில் ஷாம், குட்டி ராதிகா, அருண் விஜய், பாதிரியாராக பசுபதி, கருணாஸ் உல்ளிட்டவர்கள் நடித்த இயற்கைத் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இயற்கை படம் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய முதல் படம். ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தயெவ்ஸ்கி எழுதிய வெண்ணிற இரவுகள் என்கிற காதல் கதையை தழுவி எடுக்கப் பட்டத் திரைப்படம் இயற்கை. இந்த கதை 30க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.


படத்தின் கதை


ராமேஸ்வரம் துறைமுகத்துக்கு வரும் கப்பலில் வேலை செய்யும் இளைஞருக்கு (ஷாம்) அங்கு கப்பலில் வருபவர்களுக்கு பொருட்கள் விற்பனை செய்யும் நான்சி (குட்டி ராதிகா) மீது காதல் ஏற்படுகிறது.

ஆனால் நான்சியோ எப்பவோ வந்து சென்ற கப்பலின் கேப்டன் அருண் விஜய் மீது காதல் கொண்டு அவருக்காக காத்திருக்கிறார். இதில் ஷாமின் காதல் பெரிதா? குட்டி ராதிகாவின் காத்திருப்பு பெரிதா? என செல்லும் கதையில் கடைசியில் ஷாம் மீது காதல் கொண்டு குட்டி ராதிகா அவரை திருமணம் செய்ய நினைக்கும் நேரத்தில் அருண் விஜய் திரும்ப வருவார். இதனால் என்ன முடிவு ஏற்படும் என்பதை அழகான கவிதை நயத்தில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் முடித்திருப்பார்.





காதல் படங்கள் என்றால் கடைசியில் கதாநாயகனும் கதாநாயகியும் சேர்ந்துவிட வேண்டும் என்பது சினிமாவில் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. இயற்கை படம் பார்வையாளர்களிடம் இத்தனை ஆண்டுகள் கழித்தும் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தியிருப்பதற்கு முக்கிய காரணம் மருதுவும் நான்ஸியும் இணைவதற்கான அத்தனை சாத்தியங்களும் படத்தின் இறுதியில் இருக்கும்.


ஒருவேளை மருது தன் காதலில் வெற்றிபெறுகிறான் என்றால் பார்வையாளர்களுக்கு அது ஒரு மகிழ்ச்சிகரமான தருணமாக இருக்கும் ஆனால் அதைவிட ஒரு பெரிய உணர்வு நான்ஸி தன்னை திருமணம் செய்ய சம்மதித்த பிறகும் அவள் முகுந்தனின் மேல் வைத்திருக்கும் காதலுக்கு வழிவிட்டு மருது ஒதுங்கிக் கொள்வது பார்வையாளர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு உணர்வை வழங்குவதால் தான் இயற்கை திரைப்படம் இருபது ஆண்டுகளுக்குப் பின்னும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக மாறுகிறது.


இந்த படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றது. படத்தில் முதலில் ஷாம் கேரக்டரில் நடிக்க நடிகர் சூர்யாவே படக்குழுவினரின் தேர்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.