உச்சநீதிமன்றம் ஆளுநர் தலையில் குட்டு வைப்பதற்குள் ஆளுநரே முன்வந்து இந்த திருப்பு அனுப்பிய பத்து மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


செங்கல்பட்டு  ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அத்திமானம் மேலவளம் ஆகிய பகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தங்கள் கட்சி கொடியினை  ஏற்றி வைத்து, கட்சி நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்களுடன்  கலந்துரையாடினார்.


நிர்வாகிகள் மத்தியில் தொல் திருமாவளவன் பேசியதாவது: " வழிநெடுக பல்வேறு இடங்களில் கொடியேற்று விழா நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன். இன்று மழை வராமல் நமக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பை கொடுத்திருக்கிறது.  இயற்கை ஒத்துழைப்பு கொடுத்ததில் மகிழ்ச்சி.  வருகின்ற டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்ற வெல்லும் ஜனநாயகம் மாநாட்டிற்கான பணிகளை முடுக்கி விட வேண்டும் என்ற வகையில்,  தலைமையகத்தில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.




அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அங்கிருந்து நான் மாலை 5 மணிக்கு தான்  புறப்பட வேண்டிய சூழல் இருந்தது. இல்லை என்றால் சற்று முன்னதாகவே இங்கு வந்திருப்பேன்.  மணி கணக்கில் நீங்கள் இங்கு காத்திருந்தீர்கள்,  இந்த நிகழ்ச்சியில் நன்றாக நடந்தேற ஒத்துழைப்பையும் கொடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்”  என   தொண்டர்கள் மத்தியில் பேசினார்.


இதனை அடுத்த செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்ததாவது : சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதா தீர்மானங்களை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு எதிராக மீண்டும் சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக 10 மசோதா தீர்மானத்தை நிறைவேற்றி பத்து மசோதாக்களை ஆளுநருக்கு திருப்பி அனுப்பி உள்ளோம். இவை அனைத்தும் பல்கலைக்கழகத்தை சம்பந்தப்பட்டவை ஆகும்.




இவ்வளவு காலம் ஆளுநர் வேந்தராக செயல்பட்டு வந்த நிலையில், இப்போது  அதனை மாற்றி வேந்தர் செய்த வேலைகளை தமிழக அரசு இனி செய்யும் கல்வி மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பி அனுப்பிய பத்து மசோதாவிற்கு மாணவர்களின் அக்கறையை காட்டாமல் எந்தவித பதிலும் கூறாமல் திருப்பி அனுப்பி உள்ளார் ஆளுநர்.


 


உச்ச நீதிமன்றம் ஆளுநர் தலையில் குட்டு வைப்பதற்கு முன்பு அவரே முன்வந்து இந்த பத்து மசோதாக்களையும் நிறைவேற்ற வேண்டும். வருகின்ற  டிசம்பர் 23 திருச்சியில் விசிக கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்கிற தலைப்பில் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் முதலமைச்சர் அவர்களும் மற்றும் தமிழக கூட்டணி கட்சி தலைவர்களும் தேசிய கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.