இயக்குநர் வசந்த் இயக்கத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் ஹீரோவாக நடித்த திரைப்படம்தான் கேளடி கண்மணி . இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களையுமே இளையராஜா அவர்கள் வெறும் அரை மணி நேரத்தில் உருவாக்கியதாக படத்தின் இயக்குநர் வசந்த் தெரிவித்துள்ளர். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் , அதில் இடம்பெற்ற மண்ணில் இந்த காதல் இன்றி பாடல் இன்றளவும் பிரபலம். வழக்கமாக பாடலை பாடி அசத்தும் எஸ்.பி.பிக்கு அந்த படத்தில் சில சவால்களை கொடுத்திருந்தார் இளையராஜா. அதாவது எஸ்.பி.பி அந்த பாடலை மூச்சுவிடமால் பாடியிருந்தார். இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் ஒன்றில் அந்த பாடல் எப்படி உருவானது என்பது குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பகிர்ந்திருக்கிறார்.


 






அவர் கூறியதாவது :”இயக்குநர் சொல்வதைதான் நான் பண்ணுவேன். அந்த படத்தில் முதல்ல எனக்கு பாட்டு இல்லை. காட்சியில நான் ஒரு திருமண விழாவுல ஓடி ஆடி வேலை செய்யுறது மாதிரியான காட்சி. அப்போ எனது நண்பர் வந்து என்னிடம் மேடைக்கச்சேரி பாடும் நபர் வரவில்லை என்ன செய்வது என யோசனை கேட்பார். உடனே பல பாடல்களை இணைத்து ஒரு பாடலை நான் தயார் செய்வது போலத்தான் காட்சி இருக்கும் . அதைத்தான் இப்போ மெட்லி என கூறுகிறார்கள். மெட்லி மாதிரியான ஒரு பாடலை டேப் ரெக்கார்டில் ரெடி பண்ணி , பாட்டை ஷூட் பண்ணிட்டோம். அதன் பிறகு இளையராஜாவிடம்  சொன்னதும் , அவர் சொன்னார் படத்தில் அவரை முக்கிய கதாபாத்திரமாக வைத்துக்கொண்டு பாடல் இல்லை என்றால் எப்படி, ஏதாவது ஒரு பாடல் பண்ண வேண்டும் அப்படினுதான் மூச்சு விடாம பாடல் ஒன்றை ராஜா ஐடியா பண்ணார். அப்போவெல்லாம் இந்த தொழில்நுட்பம் கிடையாது. ஆனாலும் அந்த பாடலை பாடினோம்“ என அந்த பாடல் உருவான விதம் குறித்து பேசியிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியன்.