மார்க் ஆண்டனி படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி செங்கல்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா மாணவர்களிடம் உரையாடியது கவனமீர்த்துள்ளது.
"மார்க் ஆண்டனி பாடல் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. விஷால், ஆதிக் ரவிச்சந்திரன், ஜி.வி.பிரகாஷ் ஆகியோருக்கு நன்றி. தயாரிப்பாளர் வினோத்துக்கு நன்றி” என்றார்.
தொடர்ந்து இப்படத்தில் “மார்க் யார், ஆண்டனி யார்?” என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா, “மார்க், ஆண்டனி இருவருமே விஷால் தான்” எனப் பேசினார். மேலும் தன் கதாபாத்திரம் ஜாக்கி பாண்டியன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து மார்க் ஆண்டனி படம் பற்றிப் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “மார்க் ஆண்டனியை ‘மாநாடு 2’ என்று சொல்லலாம். இதிலும் டைம் ட்ராவல் உள்ளது. நான் மாநாடு டப்பிங்கின் போது எனிமி படத்துக்கு டப் செய்துகொண்டிருந்த நிலையில் இருவரும் சந்தித்துப் பேசினோம். அப்போது சார் கதை கேட்டீங்களா.. நாம பண்ணலாம் என விஷால் சொன்னார். தொடர்ந்து ஆதிக்கை வரசொல்லி கதை கேட்டதுமே எனக்கு சார்ஜ் ஆகிவிட்டது.
கண்டிப்பாக நீங்கள் நல்ல எண்டர்டெய்ன்மெண்டைப் பெறுவீர்கள். நல்ல நட்சத்திரங்கள் படத்தில் இருக்கிறார்கள். விஷால், புஷ்பா புகழ் சுனில், செல்வராகவன், ரித்து வர்மா என நல்ல ஸ்டார்கள் இருக்கிறார்கள். ஆதிக் திரைக்கதையை நன்றாக அமைத்திருக்கிறார். கேங்ஸ்டர் கதை பின்னணியில் டைம் ட்ராவல் உடன் நல்ல சைன்ஸ் ஃபிக்ஷன். நீங்க நல்லா என்ஜாய் பண்ணுவீங்க. படத்த பத்தி அதிகம் பேசக்கூடாது, படம் தான் பேசணும்.
படத்த ரொம்ப ரசிச்சு பண்ணோம். க்ளைமேக்ஸில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. நீங்கள் பார்க்கும்போது ரசிப்பீர்கள்” என்றார்.
தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “இந்த உலகம் நல்ல பரந்துவிரிந்த உலகம். நீங்கள் அனைவரும் படித்து சிறந்த மருத்துவர்களாக சேவை செய்ய வேண்டும். எங்கள் வீட்டில் மூன்று மருத்துவர்கள் இருக்கிறார்கள். மருத்துவராவது அவ்வளவு எளிதல்ல.
மாணவர்களுக்கு நான் சொல்வது ஒன்று தான். எதிர்காலம் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வருகிறது. அறிவியலின் தாக்கம் அதிகமாக இருக்கப்போகிறது. போதைப் பொருள்கள் உள்ளிட்ட பல விஷயங்களும் உங்கள் கவனத்தை சிதறடிக்க காத்திருக்கின்றன. நீங்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் இருந்து, உங்களை நன்றாக பார்த்துக் கொண்டு, என்ஜாய் செய்து கொண்டு சமூகத்தை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். இந்தியாவை சர்வதேச அளவில் கொண்டு செல்லுங்கள்” எனப் பேசியுள்ளார்.