தமிழ் சினிமாவின் தவிரக்க முடியாத நடிகராக இருப்பவர் விஜய். இவரது அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ . சந்திரசேகர்தான் விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். ஆரம்ப நாட்களில் விஜய்யை ஒரு கதாநாயகனாக மாற்றிவிட வேண்டும் என்ற மெனக்கெடல்களை அதிகம் செய்தவர். ஆனால் தற்போது விஜய்க்கும் அவரது அப்பாவிற்கும் மனக்கசப்பு ஏற்ப்பட்டுள்ளது. ஆனால் அது சண்டை இல்லை . கருத்து வேறுபாடுதான். எங்கள் குடும்ப ஒற்றுமை எப்போதுமே குலையாமல்தான் இருக்கிறது என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திர சேகர்.
அதில் "என் பேரனையோ பேத்தியையோ ரொம்ப நெருங்கி நான் வைத்துக்கொண்டது கிடையாது. என் மருமகளின் குணம் எப்படினா , அவங்க விஜய்யின் பிஸ்னசில் தலையிடவே மாட்டாங்க. அவங்களுக்கு குழந்தைகள் மட்டும்தான் குறிக்கோளாக இருப்பாங்க. குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் பார்த்துக்குவாங்க. காலையில பள்ளிக்கு அழைத்துக்கொண்டு செல்வதில் இருந்து மாலை வீட்டுக்கு அழைத்து வருவது வரை அனைத்தையும் அவங்கதான் செய்வாங்க. ஒரு அழகான தாய்னு சொல்லுவாங்கள்ல அது அவங்கதான் . குழந்தைகள் மேல அவ்வளவு பொசஸிவாக இருப்பாங்க. அப்படியான தாயை பொதுவாக பார்க்க முடியாது. அவங்களுடைய உலகமே குழந்தைகள்தான். அதனால பசங்க எப்பொழுதுமே மருமகளுடன்தான் வருவாங்க . அவங்களோடதான் போவாங்க. இப்போ நல்லா வளர்ந்துட்டாங்க. பேரன் சஞ்சய் இங்கே இல்லை. அவன் கனடால படிச்சான். இப்போ மேல்படிப்பை லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறான். நாங்க மொபைல்லதான் பேசுவோம். சஞ்சய் ரொம்ப பாசமா இருப்பான் . பேரக்குழந்தைகளை மடியில் வைத்துதான் கொஞ்சனும்னு அவசியம் இல்லை. அவங்க ரொம்ப பாசமான குழந்தைகள் . என் மேல ரொம்ப அன்பா இருப்பாங்க. மருமகளும் அப்படித்தான். கடவுள் அதில் எந்த குறையும் வைக்கவில்லை. பேரக்குழந்தைகள் என்னை “சந்திரா தாத்தானு “ கூப்பிடுவாங்க. என் அம்மாதான் என்னை சந்திரானு கூப்பிடுவாங்க. இவங்களுக்கு எப்படி அது வந்துச்சுனு எனக்கு தெரியல. எனக்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடு வருடம் வருடம் வரும் . நான் சிலவற்றை சொல்லுவேன் அது அவருக்கு சரியா படாது. உடனே அவங்க அம்மாவிடம் அழைத்து பேசுவார். எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் இருக்கு. என் மகன் செய்யும் நல்ல விஷயங்கள் எதுவும் என் கண்ணுக்கு படாது. அதை நான் பாராட்ட மாட்டேன். ஏதாவது சின்ன தப்பு இருந்தாலும் அதை சுட்டிக்காட்டி பேசுவேன். ஏன்னா கூட இருக்குறவங்க எல்லாம் சூப்பர், சூப்பர் என சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது நான் அது சரியில்லை என சொல்வேன். உடனே தலையில் கையை வைத்துக்கொண்டு , கண்களை மூடிவிட்டு , ம்ம்ம்...சரி அப்பறம் என சொல்லுவார். அப்படியென்றால் இந்த டாப்பிக்கை விட்டுட்டு அடுத்த டாப்பிக் போங்கன்னு அர்த்தம் . அவ்வளவுதான் புரிதுக்கொள்ள வேண்டும் . விஜய் 60 படங்களுக்கு மேல் பண்ணிட்டாரு. ஆனால் நான் நல்லா நடிச்சுருக்கேன்னு சொன்னது 3 படங்கள்தான். அவங்க அம்மா என்னைத்தான் திட்டுவாங்க. எல்லாருக்கும் பிடிச்சுருக்கு உங்களுக்குதான் கண்கள் சரியில்லைனு சொல்லுவாங்க. எப்போதுமே விஜய்க்கு அவங்க அம்மா சப்போர்ட் “ என்றார் விஜய்யின் அப்பா சந்திர சேகர்.