ஐ.பி.எல். தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது.
அதனை அடுத்து சென்னை அணிக்காக ஓப்பனிங் களமிறங்கிய டெவன் கான்வே, ருத்துராஜ் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. நிதானமாக ஆடிய கான்வே, அரை சதம் கடந்து அசத்தினார். அவரை அடுத்து ருத்துராஜூம் அரை சதம் கடப்பார் என எதிர்ப்பார்த்தபோது, 43 ரன்களுக்கு அவுட்டாகினார். விக்கெட் சரிந்தாலும், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே, 87 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருக்கிறது சென்னை அணி.
கடினமான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பத்திலே சறுக்கல் இருந்தது. பரத், வார்னர் அடுத்தடுத்து அவுட்டாக நிதானமாக ரன் சேர்த்த மிட்சல் மார்ஷை மொயின் அலி அவுட்டாக்கினார். அவரை அடுத்து களமிறங்கிய பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சிறப்பாக பந்துவீசிய சென்னை அணி பந்துவீச்சாளர்களில் மொயின் அலி 3 விக்கெட்டுகளும், முகேஷ், சிம்ரன் ஜித், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மஹீஷ் தீக்ஷன்னா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். இதனால், 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து போட்டியில் தோல்வி அடைந்தது டெல்லி அணி.
91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கும் சென்னை அணி, இன்னும் ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதனால், ஐபிஎல் தொடரில் மீதம் இருக்கும் போட்டிகளில் சிஎஸ்கே இன்னும் கவனமாக விளையாடும் என தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்