ஸ்ரீ ரங்கத்திலிருந்து புறப்பட்டு, வேண்டா வெறுப்பாக வேலை தேடி, சென்னையில் உள்ள அக்கா வீட்டிற்கு வரும் ஒரு இளைஞன். ஏதாட்சையாக பஸ்ஸில் பார்க்கும் இளம்பெண் மீது காதல். அவளை பின் தொடர, அவளும் முன் நகர, காதலோடு, காவலும் சேர்கிறது. இளம் பெண்ணை நெருங்க நினைப்பவர்களை, அந்த பெண்ணை மறைமுகமாக காவல் காத்து வரும் ஒரு கும்பல் தாக்குகிறது. 


இப்போது, ஸ்ரீரங்கம் இளைஞனுக்கும் அந்த கும்பலால் பிரச்சனை, அதுவரை அமைதியாக காதல் பேசிக் கொண்டிருந்த இளைஞன், இப்போது வேறு முகம் காட்டுகிறான். தன்னை விரட்டி வரும் ரவுடி கும்பலிடமிருந்து தப்பித்து ஓடும் அவன், தன் முன்னால் இருக்கம் ஷட்டரை அடைத்து, அந்த ரவுடிகளை பிய்த்து மேயும் போது தான், அவன் ரொமான்ஸ் ஹீரோ மட்டுமல்ல, ஆக்ஷன் ஹீரோ என்பதும் தெரிகிறது. 






அதுவரை தன் பின்னால் வருபவர்களை அடி மட்டுமே வாங்கிப் பார்த்த அந்த இளம் பெண், முதன்முறையாக தன் அண்ணன் அனுப்பிய ஆட்களை அடித்து துவம்சம் செய்த அந்த இளைஞனை விரும்புகிறாள். தன் தங்கையை தொட்டு, தன் ஆட்களையும் தொட்டுப் பார்த்த இளைஞனை விட்டு வைத்தானா அண்ணன்? அடிதடியே முழு நேர வேலையாக செய்து கொண்டிருக்கும் அண்ணனை சமாளித்து, அவன் தங்கையை கரம் பிடித்தானா இளைஞன்? இது தான் ரன் படத்தின் கதை. 


ஆனந்தம் படத்தை எடுத்த பின், லிங்குசாமி எடுத்த இரண்டாவது படம். இரண்டுக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லாத கதை. காதல் சொட்ட சொட்ட... இளசுகளை தியேட்டருக்கு அள்ளிக் கொண்டு வந்த படம். வித்யாசாகரின் ‛காதல் பிசாசே...’ இசை, காற்றால் பரவி, கனமாய் எங்கு பார்த்தாலும் ஒலித்துக் கொண்டிருந்தது. நடிகர் மாதவனுக்கு பெரிய ஆக்ஷன் ஃப்ளாக்காக மாறிய படம். அறிமுகமானதிலே பெரிய மார்க்கெட்டை மீரா ஜாஸ்மினுக்கு பெற்றுத் தந்த படம். ரகுவரன், அதுல்குல்கர்னி, விவேக் என பலரும் முத்திரை பதித்த படம். 






ஏ.எம்.ரத்தினத்தின் ஸ்ரீ சூர்யா மூவிஸிற்கு லாபத்தை கொட்டிக் கொடுத்த படம். இயக்குனர் லிங்குசாமியை கமர்ஷியல் ஹிட் இயக்குனர் என்கிற முகத்தை தந்த படம். இப்படி எல்லா வகையிலும் சாதகமாகவும், சாதனையாகவும் தமிழ்நாட்டு தியேட்டர்களை வலம் வந்த திரைப்படம் ரன். 


கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 2002 ம் ஆண்டு, இதே நாளில் வெளியான ரன் திரைப்படம், ட்ரெய்லரில் ஏற்படுத்திய தாக்கம், தியேட்டர் வாசலில் பலரும் குவிந்து கிடக்க காரணமானது. எதிர்பார்ப்புகளை துளியும் குறையவிடாமல் அத்தனையையும் நிறைவேற்றிய திரைப்படம். இப்படி ஒரு படத்தை, இனி லிங்குசாமி நினைத்தாலும் தர முடியாது என்கிற அளவிற்கு பேசவைத்து, பேசப்படும் திரைப்படம் ‛ரன்’.