பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ராஜமெளலி இயக்கி வரும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில்  தெலுங்கில் முன்னணி  பிரபல நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிக்கின்றனர்.  


முக்கிய கதாபாத்திரங்களில் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.  செந்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். 400 கோடி செலவில் உருவாகி வருவதாக சொல்லப்படும் ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இதனிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இந்தப்படம் வருகிற ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள், முன்னோட்டக் காட்சிகள் மற்றும் மேக்கிங் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. அண்மையில் படத்தில் இருந்து கிளிம்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்ட நிலையில், நேற்றைய தினம் நாட்டுக்கூத்து பாடல் வெளியானது.






 






இதில் ஜூனியர் என்.டி.ஆரும், ராம் சரண் ஆகியோர் ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் இந்தப் பாடலை ட்ரோல் செய்தும், சில பாடல்களோடு இந்த பாடலின் இசையை ஒப்பிட்டும் நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்த ஒரு வீடியோ ஒன்று ட்விட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது. 


அதில் நாட்டு கூத்து பாடலின் இசையை விஜய் நடிப்பில் வெளியான  ‘பூவே உனக்காக’ படத்தில் இடம்பெற்ற ’மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது’ பாடலோடும், விஷால் நடிப்பில் வெளியான ’சிவப்பதிகாரம்’ படத்தில் இடம்பெற்ற  ‘மன்னார்குடி கலகலக்க’ பாடலோடும் ஒப்பிட்டு ட்ரோல் செய்துள்ளனர்.