பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி கையில் எடுத்திருக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ . 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்தில் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது. 






இந்நிலையில் படத்தின் முதல் கிளிம்ஸ் வீடியோ நேற்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு காரணமாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 45 நொடிகள் அடங்கிய டீசர் வீடியோ வெளியீட்டு தேதியை படக்குழுவினர் ஒத்திவைத்துள்ளனர். அதன்படி படம் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி காலை 11 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினர்  வெளியிட்டுள்ளனர்.ஏற்கனவே வெளியான மேக்கிங் காட்சிகள் மற்றும் முதல் பாடல் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.







முன்னதாக ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெளியீடு குறித்து படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதி உலகம் முழுவது உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் தற்போது மும்பையிலிருந்து படத்தின் புரமோஷன் வேலைகளை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.