தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமௌலியின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான `ஆர்.ஆர்.ஆர்’ வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 7 அன்று வெளியாகவுள்ளது. இதில் நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட் முதலானோர் நடித்துள்ளனர். இந்தப் பிரம்மாண்ட திரைப்பட வெளியீட்டில் தற்போது புதிதாகப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
`ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ப்ரொமோஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கியுள்ளன. பிரபல மல்டிபிளெக்ஸ் திரையரங்க நெட்வொர்க் ஒன்றுடன் இணைந்து விளம்பரம் செய்வது, `நாட்டு நாட்டு’ என்ற சிங்கிள் பாடலை வெளியிட்டு வைரலாக்கியது எனத் தொடர்ந்து ப்ரொமோஷன்கள் நடந்து வருகையில், ஆந்திரப் பிரதேசத்தின் திரையரங்க டிக்கெட் விலைகள் பட வெளியீட்டிற்குத் தலைவலியாக மாறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பிரம்மாண்ட பெரிய பட்ஜெட் திரைப்படம் ஆந்திரப் பிரதேசப் பகுதியில் 100 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், படத்தின் தயாரிப்பாளர்கள் திரையரங்க டிக்கெட் விலையைக் குறைக்க மறுக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, கூடுதல் காட்சிகள், அதிக டிக்கெட் கட்டணம் என முதல் வாரங்களில் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. எனினும் தற்போது திரையரங்கு டிக்கெட் கட்டணம் முறைப்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டிருப்பது பலரின் திட்டங்களில் சிக்கலை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், `ஆர்.ஆர்.ஆர்’ படத்தை அதிக டிக்கெட் கட்டணத்துடன் வெளியிட அனுமதி பெறுவதற்காகப் படத்தின் தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தை நாடலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு பொருளின் விலையைக் குறைத்து விற்க யாருக்கும் உரிமை இல்லை என்ற ரீதியில் வாதாட இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தகவல்கள் தவறானவை என `ஆர்.ஆர்.ஆர்’ தயாரிப்பாளர்கள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. `டிக்கெட் கட்டணங்கள் குறைக்கப்படுவது எங்கள் திரைப்படத்தை அதிகமாக பாதிக்கும் என்பது உண்மை. ஆனால் படக்குழுவினர் நீதிமன்றத்திற்குச் செல்லும் நோக்கத்துடன் இல்லை. நாங்கள் ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வரைச் சந்தித்து, எங்கள் நிலைமையை எடுத்துக் கூறி நல்ல தீர்வை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளோம்’ எனத் தயாரிப்பு நிறுவனமான டிவிவி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கூறப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து பெரிய நடிகர்கள் நடித்துள்ள `பீம்லா நாயக்’, `ராதே ஷ்யாம்’ ஆகிய படங்கள் சங்கராந்தி விழாவுக்கும், `புஷ்பா’, `ஷ்யாம் சிங்கா ராய்’ ஆகிய படங்கள் டிசம்பர் மாதத்திலும் வெளியாகும் போது, நடைமுறையில் என்ன பிரச்னைகள் இருக்கும் எனத் தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.