ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என்ரு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா, ஒமிக்ரான் காரணமாக ஏற்கெனவே இரண்டு முறை வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.






 


சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘டான்’ திரைப்படமும் அன்றே தியேட்டரில் வெளியாகிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘ஆர்ஆர்ஆர்’ பட புரோமோஷனில் பேசிய சிவகார்த்திகேயன், ‘ஆர்ஆர்ஆர், வலிமை படங்கள் எல்லாம் தியேட்டரில் வர வேண்டும் என்று பேசினார். தற்போது, அவரின் டான் படத்துக்கு போட்டியாக ஆர்ஆர்ஆர் வெளியாவது, அவரின் படத்துக்கு வசூல் ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.


‘பாகுபலி’ திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் இயக்குநர் ராஜமௌலி. தெலுங்கில் மட்டும் தெரிந்த முகமாய் இருந்த ராஜமௌலி, பாகுபலிக்கு பிறகு அவர் அடுத்த என்ன படம் இயக்குவிருக்கிறார் என்ற ஆவலுடன் இருந்த நிலையில்,  ‘ஆர்.ஆர்.ஆர்.,’  என்ற பிரமாண்ட திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது. அந்தப் படத்தில் பிரபல தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்தனர். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்டில், உக்ரைனில் படத்தின் கடைசி ஷெட்யூல் முடிந்தது.


தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம், கடந்தாண்டு அக்டோபர் 13ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, பல காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள குஷியில் ரசிகர்கள் இருந்தனர். படத்திற்கான புரோமோஷனில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மும்பை என ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டீஆர் பறந்துக்கொண்டிருந்தனர்.