தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாயக்கனூர் கிராமத்திற்கு உட்பட்ட கரியம்பட்டி, செங்கனூர், உள்ளிட்ட 7 கிராமத்துக்கு தாய் கிராமமான நாயக்கனூர் கிராமத்தில், கோயில் கூலி (காளை) கடந்த 20 ஆண்டுகளாக வளர்த்து வந்தது. இந்த காளை வருடந்தோறும் 7 ஊர் சார்பாக நடைபெறும் எருது விடும் போட்டியில் முதன்மையாகவும் சிறப்பாகவும் பங்கேற்று வந்தது. மேலும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் அன்பு காட்டும்,  இதனை கடவுளை வணங்குவது போல மக்கள் வணங்கி பாதுகாத்து வந்தனர். இதற்கு பொதுமக்கள் சார்பாக புல், தவிடு போன்ற தீவனங்கள், உணவுகள் தினந்தோறும் வழங்கப்பட்டு வந்துள்ளது. 

 



 

இந்தநிலையில் இந்த காளை உடல் குறைவால் இன்று திடீரென உயிரிழந்துள்ளது. இதனையடுத்து 7 ஊரை சேரந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காளை மாட்டுக்கு இறுதி சடங்குகள் மற்றும்  மேள தாளத்துடன் சிறப்பு பூஜைகள் செய்து நல்லடக்கம் செய்தனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை இளைஞர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலை தளங்களில் பரப்பி, தங்களது மன வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 



ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை அருகே புகுந்த ஒற்றை காட்டு யானை-காவிரி ஆற்றில் ஆனந்த குளியல்



 



தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை பகுதியில் இன்று அதிகாலை  காட்டு யானை ஒன்று தனியாக கிராமத்தை நோக்கி வந்துள்ளது. தொடர்ந்து ஒற்றை காட்டு யானை வருவதை கவனித்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து வனத் துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து காட்டு யானையை மீண்டும் வனப் பகுதியில் விரட்டினர். ஆனால் ஒற்றை யானை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நுழைந்தது. தொடர்ந்து காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து, ஆற்றில் பாறைகள் மேலே தெரிய ஆரம்பித்துள்ளதால், யானை காவிரி ஆற்றில் இறங்கி ஆனந்தமாக நீந்தி சென்றது. அப்போது பரிசலில் சென்றவர்கள் யானை வருவதை கண்டு அச்சமடைந்தனர்.

 



 

தொடர்ந்து காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக உள்ளதால்  கர்நாடக வனப் பகுதியில் இருந்த காட்டு யானை உணவு தேடி  கர்நாடக எல்லைப் மாறுகொட்டாய் பகுதியில் இருந்து தமிழக எல்லைப் பகுதியான ஊட்டமலை பகுதிக்கு ஆற்றை கடந்து வந்துள்ளது. ஒற்றை யானை வருவதை கண்ட பொதுமக்கள், ஊருக்குள் யானை நுழையும் முன்பு யானையை மீண்டும் காட்டுக்கு விரட்டியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் ஒற்றை யானை அடிக்கடி காவிரி ஆற்றில் தண்ணீர் அருந்த வருவதால், ஆலம்பாடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என தருமபுரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.