பாகுபலி படத்தை இயக்கி இந்தியா முழுவதும் பிரபலமடைந்த இயக்குநர் ராஜமௌலி. அவர் தற்போது ஆர்ஆர்ஆர் (ரத்தம், ரணம், ரௌத்ரம்) என்ற படத்தை இயக்கியுள்ளார். 


இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு கீரவாணி (மரகதமணி) இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே பாகுபலி படத்துக்கு வசனம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு இப்படம் வரவிருக்கிறது. இந்தப் படத்தின் மூன்று பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் RRR படக்குழுவினரும், நடிகர்கள் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,  “இரண்டு வருடங்களுக்கு பிறகு சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். அதற்கு காரணம் ராஜமௌலி மட்டும்தான். அவரது பெரிய ரசிகன் நான். இந்தப் படம் பாகுபலியின் சாதனையை முறியடிக்கும் என ராஜமௌலியிடம் சொன்னேன்.




என்னை நடனம் ஆட அழைத்தார்கள். சிவா வந்தால் நான் மாட்டிக்கொள்வேன் என்று நினைத்தேன். ஏனென்றால் எனக்கு நடனம் வராது. சிலருக்கு நடனம் ஆடினால்தான் கழுத்து சுளுக்கும். இவர்கள் ஆடுவதை பார்த்தாலே எனக்கு கழுத்து சுளுக்கிக்கொண்டது. எனக்கு நடனம் சுத்தமாக வராது.


இந்தப் படத்திற்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. 10 வருடங்கள் முன்னர் மஹதீரா படத்தை டப் செய்து தமிழில் வெளியிட்டோம். அப்போது சத்யம் திரையரங்கில் அப்படத்தை வெளியிட வேண்டும் என ராஜமௌலி கேட்டுக்கொண்டார்.




இப்போது RRR படத்தை மூன்று ஏரியாக்களில் ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது. எப்படியும் சத்யம் திரையரங்கின் 6 திரைகளில் 5 திரைகளில் இந்தப் படத்தைத்தான் போடுவோம். இந்தப் படம் தென்னிந்தியாவின் ஒரு மைல் கல்லாக இருக்கும்” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Rajamouli| ‛ராம் சரண் அப்படி... ஜூனியர் என்.டி.ஆர் இப்படி...’ ராஜமௌலி ஓபன் டாக்!