டோலிவுட்டில் பிரம்மாண்ட இயக்குநராகக் கொண்டாடப்படும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய  பிளாக்பஸ்டர் இந்தியப் படமான ஆர்.ஆர்.ஆர் ஜப்பானிய பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.


ஆஸ்கர் வென்ற ஆர்.ஆர்.ஆர்.:


கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா  உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கீரவாணி இசையமைத்த இப்படத்தில் ‘நாட்டு நாட்டு’ பாடல் தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்று ட்ரெண்ட் ஆனதுடன், ஆஸ்கர் விருதையும் வென்றது.


பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற நிலையில், ஆஸ்கர் விழாவில் இப்பாடலுக்கு விழா மேடையில் நடன கலைஞர்கள் நடனமாடினர். 


900 கோடிகள் வசூல்:


இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 900 கோடிகளுக்கும் மேல் இப்படம் வசூலித்தது. இந்நிலையில், ஜப்பானில் இந்தியப் படங்களுக்கு நிலவும் மார்க்கெட்டைக் குறிவைத்து இப்படத்தை ஜப்பானில் படக்குழு வெளியிட்ட முழுவீச்சில் ப்ரொமோஷன் பணிகளிலும் ஈடுபட்டனர்.


கடந்த ஆண்டு அக்டோபரில் ஜப்பானில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் முதலில் குறைவான ஸ்க்ரீன்களிலேயே ஒளிபரப்பட்டுள்ளன. ஆனால் இப்படத்துக்கு அங்கு கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பு அதிகரித்த நிலையில், தற்போது 205 நாள்களைக் கடந்து ஓடி வருகிறது.


ஜப்பானில் பட்டையை கிளப்பிய வசூல்:


இந்நிலையில் பல சாதனைகளின் வரிசையில் ஆர்.ஆர்.ஆர் படம் தற்போது ஜப்பானில் வரலாறு காணாத வசூலைக் குவித்துள்ளது. அதன்படி,  ஜப்பானின் இரண்டு பில்லியன் யென்  அதாவது, 121 கோடிகளைத் தாண்டி வசூலித்துள்ளது. 


 






1995ஆம் ஆண்டு வெளியான நடிகர் ரஜினிகாந்தின் முத்து படம் தான் ஜப்பானிய மார்க்கெட்டில் அதிகம் வசூலித்த இந்தியப் படமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதமே ஆர்.ஆர்.ஆர் படம் இந்த சாதனையை முறியடித்தது. இந்நிலையில் தற்போது 2 பில்லியன் யென் வசூலித்து புதிய சாதனையை ஆர்.ஆர்.ஆர் படைத்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது வரை ஆர்.ஆர்.ஆர் படம் 1230 கோடிகள் வசூலித்துள்ளது.


எனினும் ஒரு பெரும் கார்ப்பரேட் லாபி செய்தே ஆஸ்கர் விருதை ஆர்ஆர்ஆர் படக்குழு கைப்பற்றியதாக தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. 


அதேபோல் கொரியா, இந்தியா போன்ற ஆசிய சந்தைகள் ஹாலிவுட் படங்களின் விற்பனைக்கு நல்ல தளமாக இருப்பதாலேயே இங்குள்ள படங்களுக்கு ஆஸ்கர் குழுவினர் ஆஸ்கர் வழங்கி குளிர்விக்கிறார்கள் என்ற விமர்சனங்களும் பரவலாக எழுந்து வருகின்றன.


மேலும் படிக்க: The Kerala Story: ரூ.100 கோடி வசூலித்த தி கேரளா ஸ்டோரி.. சர்ச்சைகள் தொடங்கி பிரதமர் பாராட்டு வரை... கடந்து வந்த பாதை!