குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று நடிகை, பாடலாசிரியர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், இயக்குநர், ஸ்கிரிப்ட் ரைட்டர் என பன்முகம் திறமை கொண்டவராக விளங்குபவர் நடிகை ரோகினி. தனது சிறு வயதிலேயே சினிமா அனுபவம் கிடைத்தாலும் அவர் இந்த இடத்திற்கு வந்ததற்கு மிக முக்கியமான காரணம் அவரின் திறமை மட்டுமே. ஒரு டப்பிங் ஆர்டிஸ்டாக ரோகினியின் பயணம் தொடங்கியது 1989ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கீதாஞ்சலி' திரைப்படத்தின் மூலமே. இதுவரையில் மணிரத்னம் இயக்கிய ஐந்து படங்களில் ஆறு ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்த பெருமை ரோகினியையே சேரும். அதுமட்டுமல்ல நம்முடைய ஃபேவரட் ஹரோயின்களாக திரையில் பார்த்த பல ஹீரோயின்களுக்கு பின்னணியில் ஒலித்தது ரோகினியின் ஆளுமையான குரலே.
ஐஸ்வர்யா ராய் :
ஐஸ்வர்யா ராய் அறிமுகமான 'இருவர் படத்தில் அவரின் குரலாக நமக்கு ஒலித்தது ரோகினியின் குரல். மிகவும் மென்மையான அந்த குரலுக்கு சொந்தக்காரி. இந்த கூட்டணி அம்சமாக பொருந்தியதால் ஐஸ்வர்யா ராய் நடித்த ராவணன் மற்றும் குரு என இரு படங்களுக்குமே டப்பிங் பேசியதும் ரோகினி தான். இராவணன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மிகவும் உருக்கமாக கத்தி பேசியிருந்தார். ஹீரோயின்களின் உணர்வுகளுக்கேற்ப டப்பிங் பேசி அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியானவர் ரோகினி.
மனிஷா கொய்ராலா :
பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா தமிழ் சினிமாவில் 'பம்பாய்' படம் மூலம் அறிமுகமானார். ஒரு அறியாத பெண் காதலனுக்காக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் அவளின் உணர்வை மிக அழகாக தளும்பும் குரலால் வெளிப்படுத்தியிருந்தார் ரோகினி. இந்தியன் படத்திலும் மனிஷாவிற்கு குரல் கொடுத்து ரோகினி தான். நீண்ட பிரேக் எடுத்துக் கொண்ட பிறகு 'மாப்பிள்ளை' படத்தில் தனுஷ் மாமியாராக மிகவும் கெத்தான பணக்கார அதிகாரம் கொண்ட குரலாகவும் ஒலித்தார்.
ஜோதிகா :
வேட்டையாடு விளையாடு படத்தில் ஆராதனாவின் குரலாக ஒலித்தது ரோகினியின் குரல். ஜோதிகாவின் எக்ஸ்பிரஷனுக்கு ஏற்ற வகையில் ஈடுகொடுத்து பேசியது பாராட்டுக்களை குவித்தது. மேலும் பேரழகன் படத்தில் ஜோதிகாவிற்கு டப்பிங் பேசியதும் இவரே. நடிகைகளின் குணாதிசயம், கதாபத்திரத்தின் பல்ஸ் அனைத்தையும் நன்கு ஸ்டடி செய்து அதற்கு ஏற்றவாறு அந்த உணர்வை குரலில் கொண்டு வருவதில் கைதேர்ந்தவர் ரோகினி.
ரோஜா :
நடிகை ரோஜாவின் அறிமுக படமான செம்பருத்தி திரைப்படத்தில் ரோஜாவின் சாந்தமான குணாதிசயம் கொண்ட கேரக்டருக்கேற்ப வாய்ஸ் கொடுத்து இருந்தார் ரோகினி.
மதுபாலா :
ஜென்டில்மேன் படத்தில் ஐயர் ஆத்து மாமியாக நடித்த மதுபாலாவின் கொஞ்சும் குரலாக ஒலித்ததும் ரோகினியின் வாய்ஸ் தான். படத்தின் தொடக்கத்தில் துறுதுறுவென பேசும் போதும் அர்ஜுன் பற்றின உண்மை தெரிந்த பிறகு அதிர்ச்சியில் அவர் பேசும் போதும் வித்தியாசம் காட்டியிருந்தார் ரோகினி.
மேலும் ஐஸ்வர்யா, வினிதா, நக்மா,ரம்பா, ரஞ்சிதா, ஷில்பா ஷெட்டி, அமலா, பூஜா பட் என பல நடிகைகளுக்கும் ரோகினி டப்பிங் பேசி அசத்தியுள்ளார்.