நடிகர் ரன்வீர் சிங், நடிகை அலியா பட் நடிப்பில் கரண் ஜோஹர் இயக்கியுள்ள ‘ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி’ (Rocky Aur Rani Kii Prem Kahaani) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கரண் ஜோஹர் படம்
நடிகர் ஷாருக்கான் நடித்த ‘குச் குச் ஹோத்தா ஹே’ என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராகக் கால் பதித்த கரண் ஜோஹர், பாலிவுட்டின் தவிர்க்க முடியாத பிரபலங்களில் ஒருவராக தற்போது உருவெடுத்துள்ளார்.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகக் கலைஞராகவும் உருவெடுத்துள்ள கரண் ஜோஹர், தற்போது ரன்வீர் சிங் - நடிகை அலியா பட்டை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி’.
இறுதியாக நடிகர் ரன்பீர் கபூர் நடித்த ‘ஏ தில் ஹே முஷ்கில்’ திரைப்படத்துக்குப் பிறகு கரண் ஜோஹர் தற்போது மீண்டும் இந்த முழு நீள திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் இதனிடையே பிரபல ஆந்தாலஜி வெப் சீரிஸ்களான லஸ்ட் ஸ்டோரிஸ், கோஸ்ட் சீரிஸ் ஆகியவற்றில் தானும் இணைந்து இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்தப் படம் குறித்து கடந்த 2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
பாலிவுட் ட்ரேட்மார்க் படம்
பாலிவுட் தாண்டியும் ரசிகர்களைப் பெற்றுள்ள ரன்வீர் சிங் - அலியா பட் இருவரும் இப்படத்தின் இணைந்த நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.
மேலும், பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா, நடிகை ஜெயா பச்சன், ஷப்னம் ஆஸ்மி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ப்ரித்தம் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இன்று இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. பாலிவுட்டின் ட்ரேட்மார்க் காதல் மற்றும் குடும்பப் படங்களுக்கு பெயர்போன இயக்குநர் கரண் ஜோஹர், இப்படத்திலும் அதையே செய்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் உற்சாகமாக டீசரை ஷேர் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும் ஷாருக்கான், அமிதாப் பச்சன், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்டோர் நடித்த பிரபல பாலிவுட் குடும்பப் படமான ‘கபி குஷி கபி கம்’ படத்தை நினைவுபடுத்தும் வகையில், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம், குடும்ப செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்து இந்த டீசர் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கரண் ஜோஹர் தன் பழைய ஃபார்முலாவுடன் களமிறங்கி சூப்பர் ஹிட் படம் தரப்போகிறார் என ஆரூடம் சொல்லி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்!
முன்னதாக நடிகை அலியா பட் ஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனமீர்த்தது. ஒண்டர் வுமன் புகழ் கேல் கேடாட், நடிகர் ஜேய்மி டோர்னன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் அலியா பட் வில்லியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.