சென்னை விமான நிலையத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் இந்தப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் முக்கியக் காட்சிகள், விமான நிலைய கழிவறைகளில் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.


படப்பிடிப்புக்காக பெரும் தொகை


இந்நிலையில் விமான நிலைய படப்பிடிப்புக்காக ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 1.24 கோடி ரூபாய் செலுத்தி இந்திய 2 படக்குழுவினர் அனுமதி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (ஜூன்.19) முதல் சென்னை விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இன்று நடிகர் கமல்ஹாசன் படப்பிடிப்பில் கலந்துகொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியன் 2 படப்பிடிப்பு பல்வேறு தடைகளைக் கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், படப்பிடிப்புக்காக இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா 1 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பணத்தை ஜிஎஸ்டி தொகையுடன் சேர்த்து விமான நிலைய நிர்வாகத்துக்கு செலுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


போலீஸ் தொடர்பான காட்சிகள் நடைபெற்று வருவதாக ஏராளமான துணை நடிகர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


முறையான அனுமதி பெறவில்லையா?


முன்னதாக முறையான அனுமதியின்றி விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது உரிய அனுமதியுடன் தான் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முன் அனுமதித் தொகை ஏற்கெனவே செலுத்தப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக,  நடிகர் கமல்ஹாசன்  - இயக்குநர் சங்கர் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.


ரிலீஸ் தேதி அறிவிப்பு


நேற்று இந்தியன் 2 பட ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி கமல்ஹாசன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதன்படி, இந்தியன் 2 ஷூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளதாகவும், அடுத்த ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக இப்படம் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தியன் 2 படப்பணிகள் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு சிக்கல்கள், இடையூறுகளைக் கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.


சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், குரு சோமசுந்தரம்,சமுத்திரக்கனி, ஜெயப்பிரகாஷ், கிஷோர் , ஜி.மாரிமுத்து எனப் பலரும் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் படம் குறித்து நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.


வாரம் ஒரு அப்டேட்


வாரம் ஒரு அப்டேட்டை படக்குழு பகிர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று இந்தியன் 2 திரைப்படம் பற்றி பேசிய நடிகை காஜல், தான் இப்படத்தில் சுவாரஸ்யமான, மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தை செய்துள்ளதாகவும், தன் திரைப் பயணத்தில் இதுவரை இப்படி ஒரு ரோலை செய்ததில்லை என்றும் பேசியிருந்தார்.


இதேபோல் நடிகர் இசையமைப்பாளர் அனிருத் முதன்முறையாக இயக்குநர் ஷங்கர் உடன் இந்தியன் 2 படத்தில் கைக்கோர்த்துள்ளார். மற்றொருபுறம் விக்ரம் படத்துக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனுடன் இரண்டாம் முறையாக அனிருத் கைக்கோர்த்துள்ளார். இந்நிலையில், படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.