சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ரோபோ ஷங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அவரின் அல்டிமேட் பெர்பாமன்ஸ் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. சின்னத்திரையில் தனது முத்திரையை பதித்த ரோபோ ஷங்கர் வெள்ளித்திரையில் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்க பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
உடல் எடை குறைவு:
மிகவும் ஆஜானுபாகுவான உடற்தோற்றத்தை கொண்டு இருந்த ரோபோ ஷங்கர் திடீரென உடல் எடை வெகுவாக குறைந்து மெலிந்து காணப்பட்டார். அவரின் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
ரோபோ ஷங்கர் உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டதால் வாய்க்கு வந்த படி கமெண்ட்களை குவித்தனர். அவர் அளவுக்கு அதிகமாக குடிபோதைக்கு அடிமையானதால் அவர் உடல் நலம் பாதித்துவிட்டது, இனிமேல் அவர் அவ்வளவு தான். நடிகர் விஜயகாந்த் போல ரோபோ ஷங்கர் உடலும் அவ்வளவுதான் என இஷ்டத்திற்கு விமர்சித்து வந்தார்கள்.
கம்பேக் தந்த ரோபோஷங்கர்:
தற்போது ரோபோ ஷங்கர் உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு திரும்பி வருகிறது. அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறார். சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் அவரின் வழக்கமான கலகலப்பான காமெடி மூலம் பதிலளித்துள்ளார். அவரின் உடல் எடை குறைந்தது குறித்து பேசுகையில் " பல யூடியூப் சேனல்களில் நான் இறந்து விட்டதாகவும் இன்னும் சில மணி நேரங்களில் எனது உடல் வீட்டுக்கு வந்துவிடும் என்றும் ரோபோ ஷங்கர் RIP என்றும் வீடியோ போட்டு இருந்தார்கள்.
அப்போது நான் வீட்டில் நன்றாக தான் இருந்தேன். இணையத்தில் பரவிய தகவல்கள் போல எல்லாம் ஒன்றும் இல்லை. பட வாய்ப்புகளுக்காக நான் என் உடல் எடையை குறைப்பதற்காக கொஞ்சம் டயட்டில் இருந்தேன். அந்த நேரம் பார்த்து எனக்கு மஞ்சள் காமாலை நோயும் வரவே உடல் எடை மிகவும் வேகமாக குறைந்து விட்டது. அதற்கு பிறகு மருத்துவர்கள் கொடுத்த சிகிச்சையாலும், எனது குடும்பத்தாரின் கவனிப்பாலும் நான் மிகவும் கடுமையாக போராடி பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறேன்" என்றார்.
இப்படி செய்யாதீங்க:
மேலும் அவர் பேசுகையில் " உடல் நிலையில் பிரச்சனை வருவது என்பது அனைவருக்கும் சகஜம் தான். அதற்காக அவர்கள் உடல் அளவில் போராடி கொண்டு இருக்கும் போது இப்படி தயவு செய்து விமர்சனம் செய்யாதீர்கள். கமெண்ட் போடுகிறோம் என்ற பெயரில் தோன்றியதை எல்லாம் பேசக்கூடாது" என்றார்.
எனக்கும் நிறைய கெட்ட பழக்கவழக்கங்கள் இருந்தது. அதனால் தான் என்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு இப்படி ஆனது என பலரும் சொன்னார்கள். அதுவும் ஒரு வகையில் உண்மை தான். ஆனால் நம்முடைய ஆசைகளுக்காக நாம் செய்யும் தவறுகளால் நம்மை நேசிப்பவர்கள் பாதிக்கப்படுபவர்கள் கஷ்டப்படுகிறார்கள். இது என்னுடைய சொந்த அனுபவத்தால் சொல்கிறேன். அதனால் தயவு செய்து யாரும் தப்பு பண்ணாதீங்க. நமது உடல்நிலை நன்றாக இருந்தால் தான் உழைக்க முடியும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என மனம் திறந்து பேசியிருந்தார் ரோபோ ஷங்கர்.