கோவை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.  கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் கடைகள் கட்டுதல் மற்றும் கூடுதல் அபிவிருத்தி பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்க முதலமைச்சர் 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கினார். அந்த நிதியில் பல்வேறு சாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று 71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் 260 கோடி ரூபாய்  சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 578 கி.மீ. சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மின்கட்டண உயர்வை பொறுத்தவரை அரசு மிக தெளிவான விளக்கம் அளித்துள்ளது. வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை.  விசைத்தறி, கைத்தறி, விவசாயத்திற்கான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மின் கட்டணத்தில் வணிக நிறுவனங்களுக்கு சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய‌ அரசின் அறிவுறுத்தலின் படி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தில் மாற்றம் செய்துள்ளது. ஒபிஎஸ் தானும் இருக்கிறேன் என்பதை காட்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒபிஎஸ் வீட்டில் மின்தடை‌ ஏற்பட்டதா? அவரது தோட்டத்தில் ஏற்பட்டதா? தமிழ்நாட்டில் எங்கும் மின் தடை இல்லை. சீராக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அரசியலுக்காக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மின்தடை என குற்றச்சாட்டுகளை சொல்கின்றனர்.




சென்னை விமான நிலையத்தில் அமித்ஷா வருகையின் போது ஏற்பட்ட மின் தடை தற்செயலாக நடந்த பழுது. அது உடனடியாக சரி செய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்பட்டது. பாமக தலைவர் அன்புமணி மது விற்பனையில் 2 இலட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். ஆண்டிற்கே 45 ஆயிரம் கோடி தான் மது விற்பனை நடக்கிறது.‌ எப்படி 2 இலட்சம் கோடி இழப்பு ஏற்படும்?  புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போன்றோர் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட் வாங்க சில கருத்துக்கள், அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். மக்கள் நலன் சார்ந்த குற்றச்சாட்டுகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். அரசியலுக்காக சொல்லப்படும் கருத்துகளை பொருட்படுத்த தேவையில்லை.


வருமான வரித்துறை அதிகாரிகள் என் வீட்டிற்கு வரவில்லை. வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. அதிகாரிகள் கேட்ட ஆவணங்களை கொடுத்துள்ளனர். கூடுதல் ஆவணங்கள் கேட்டாலும் சமர்ப்பிக்க தயாராக உள்ளார்கள். சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்தடைஎதிர்பாராத வகையில் நடந்த நிகழ்வு. அதில் அரசியல் செய்ய வேண்டும் என்பதை மறந்து எதை வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என நினைப்பவர்களின் எண்ணம் திராவிட மண்ணில் எடுபடாது” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண