சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக இருப்பவர் நடிகர் ரோபோ ஷங்கர். சின்னத்திரை மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய நடிகர் ரோபோ ஷங்கர், நடிகர் கமல், விஜயகாந்த், கார்த்திக் என பல நடிகர்களை அச்சு அசலாக பிரதிபலித்து எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தார். அதன் மூலம் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் பெற்று சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரோபோ ஷங்கர் குறுகிய காலத்திலேயே முக்கியமான நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார்.
இந்திரஜா ஷங்கர் திருமணம் :
நடிகர் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா ஷங்கரும் 'பிகில்', 'விருமன்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் இந்திரஜா சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இந்திரஜாவுக்கும் அவரின் முறைமாமன் கார்த்திக்கிற்கும் திருமணம் என பல மாதங்களாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில் அவர்களின் இருவரின் திருமணத்தை இருவீட்டாரும் உறுதி செய்தனர்.
நடைபெற்ற நிச்சயதார்த்தம் :
அந்த வகையில் கடந்த மூன்று தினங்களுக்கு (பிப்ரவரி 2ம் தேதி) முன்னர் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ இந்திரஜா ஷங்கர் - கார்த்திக் திருமண நிச்சயதார்த்த விழா அவர்களின் இல்லத்திலேயே நடைபெற்றது. ரோபோ ஷங்கர் மகளின் நிச்சயதார்த்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நக்கீரன் கோபால் மற்றும் அம்மா கிரியேஷன் சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. மேலும் ஏராளமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் போஸ்ட் செய்து இருந்தார் இந்திரஜா.
திருமண தேதி அறிவிப்பு :
இந்நிலையில் அவர்களின் திருமணம் எப்போது என ரசிகர்களும் பலரும் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வந்தனர். அவர்களுக்கு ஒரு வீடியோ மூலம் மணப்பெண்ணும் மணமகனும் சேர்ந்து வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளனர். "அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகப்பெரிய நன்றிகள். எங்களின் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. பலரும் எங்களின் திருமணம் என்று என கேட்டு கொண்டே இருக்கின்றனர். அதை நாங்கள் இப்போது சொல்ல போகிறோம். வரும் மார்ச் 24-ஆம் தேதி தான் எங்களுடைய திருமணம் நடைபெற உள்ளது. இதை தெரிவிப்பதற்காக தான் இந்த வீடியோ. எங்களுடைய முதல் பத்திரிகையை எங்களின் குடும்பம், நண்பர்கள் என அனைவருமே எங்களுடைய ரசிகர்களாகிய நீங்கள்தான். அவர்களுக்கு தான் இந்த முதல் பத்திரிகை. உங்களுடைய ஆசீர்வாதங்கள் என்றுமே எங்களுக்கு வேண்டும். அனைவருக்கும் நன்றிகள்" என வீடியோ மூலம் அவர்களின் திருமண தேதியை அறிவித்துள்ளனர். இந்த போஸ்ட் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.