பிரபல சினிமா பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் மாயமாகி உள்ளதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பின்னணி பாடகர் யேசுதாஸின் இரண்டாவது மகனான விஜய் யேசுதாஸ் 2000 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மில்லினியம் ஸ்டார்ஸ் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். இவர் தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளியான ப்ரண்ட்ஸ் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். தமிழில் ஜெயம், ஜூலி கணபதி, அரசு, காதல் கொண்டேன், தாமிரபரணி, ராம், சண்டக்கோழி, தீபாவளி, பொக்கிஷம், ஆயிரத்தில் ஒருவன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், அழகுராஜா வனமகன் உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார்.
தொடர்ந்து பல பாடல்கள் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார். இந்நிலையில் விஜய் யேசுதாஸ் வீட்டில் இருந்த 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மாயமானதாக அவரது மனைவி தர்ஷனா சென்னை அபிராமபுரம் போலீசில் புகாரளித்துள்ளார். இது தொடர்பாக வீட்டு பணியாளர்கள் மீது சந்தேகம் உள்ளதாக அவரது புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா வீட்டில் நகைகள் திருட்டு
முன்னதாக கடந்த வாரம் இயக்குநரும், நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் தேனாம்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள வீட்டில் லாக்கரில் இருந்த பழங்கால மதிப்புமிக்க தங்கம், வைர நகைகள் காணவில்லை என தேனாம்பேட்டை போலீசில் புகாரளிக்கப்பட்டது. காணாமல் போன நகைகளின் மதிப்பு முதலில் 60 சவரன் என புகாரில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 200 சவரன் வகை காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஈஸ்வரி, கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டார்.
தனக்கு மாத சம்பளம் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகைகளை திருடியதாக தெரிவித்திருந்தார். ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கர் சாவி இருக்கும் இடம் தெரிந்த நிலையில் தான் இந்த திருட்டு நடைபெற்றுள்ளது. 6 மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நின்ற ஈஸ்வரி ஓட்டுநர் வெங்கடேசன் உதவியுடன் நகைகளை திருடியது தெரிய வந்தது. மேலும் திருடிய நகைகளை விற்று சோழிங்கநல்லூரில் வீடு வாங்கியது தெரிய வந்தது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது