பொது இடத்தில் புகைப்பிடிக்க தடை சில நாடுகளில் மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதில் ஒரு நாடு தான் ஜப்பான். ஜப்பானில் பொது இடத்தில் சிகரெட் பிடித்தால் சம்பளப் பணம் முழுவதையும் இழக்கும் அளவிற்குக் கூட அபராதம் கட்ட வேண்டியிருக்கும். அப்படி ஒரு சம்பவமும் நடந்துள்ளது.


ஜப்பானின் ஒசாகா மாகாணத்தைச் சேர்ந்த குடிமைப்பணி அதிகாரி ஒருவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பணி நேரத்தின்போது சிகரெட் புகைத்ததற்காக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், குறிப்பிட்ட அந்த நபர் அவருடைய பணிக்காலமான 14 ஆண்டுகளில் சுமார் 4500 முறை வேலை நேரத்தில் புகைப்பிடிக்கச் சென்றுள்ளார். நிதித் துறையில் முக்கிய வேலையில் இருந்த அவர் செய்தது குற்றம். அதன் காரணமாகவே அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருடன் இன்னும் 2 ஊழியர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை அவர்களுடைய அடுத்த 6 மாத சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும். இந்த அபராதம் விதிக்கப்படும் முன்னர் அவருக்கு பலமுறை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலே வேலையாட்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டுள்ளது. இந்த செய்கை பணி அர்ப்பணிப்பு மீறல் என்று கருதப்படுகிறது. குறிப்பிட்ட அந்த 61 வயது நபர் மட்டும் தனது 14 ஆண்டு பணிக்காலத்தில் 355 மணி நேரம் 19 நிமிடங்கள் புகைப்பிடிக்க செலவழித்துள்ளார் என்று தெரிகிறது.


கடந்த 2008 ஆம் ஆண்டு ஒசாகா மாகாணத்தில் அரசு அலுவலகங்கள் புகைப்பிடிக்க பூரண தடை கொண்டு வரப்பட்டது. 2019 முதல் அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் புகைப்பிடிக்கவே கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.


ஜப்பான் நாடு அதன் பணிக் கலாச்சாரத்திற்காக அறியப்பட்டது. அரசு அலுவலகங்களில் பணி முடிவதற்கு 3 நிமிடங்களுக்கு முன்னால் சென்றால் கூட மிகப்பெரிய அளவில் அபராதம் விதிக்கப்படும். 


இதற்கு எடுத்தக்காட்டாக ஒரு சம்பவமும் இருக்கிறது. தி ஃபுனாபஷி சிட்டி போர்ட் ஆஃப் எஜுகேஷன் எனப்படும் கல்வி வாரியத்தில் 2019 மே மாதம் முதல் ஜனவரி 2021 வரை ஊழியர்கள் 300 முறை பணி நிறைவு நேரத்திற்கு முன்னதாக லாக் அவுட் செய்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து தவறு செய்த ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 3 மாதங்களுக்கு 10ல் ஒரு பகுதி சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. இதில் ஒருவர் 59 வயது ஊழியர். அவர் மாலை 5.17 பேருந்தைப் பிடிக்க 5.15 மணிக்கே லாக் அவுட் செய்துவிட்டு சென்றுள்ளார்.


இத்தகைய கெடுபிடிகளைக் கொண்டது தான் ஜப்பானிய பணிக் கலாச்சாரம். இப்படி ஒரு ஆய்வெல்லாம் இந்தியாவில் செய்தால் என்னவாகும் என்று யூகித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். சில விநோதமான தண்டனைகளில் ஜப்பான் தண்டனையும் ஒன்றுதான்.