பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மண் குமார் மற்றும் வெங்கட் தயாரிப்பில் ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ரன் பேபி ரன்'. மக்களின் அமோகமான வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி, தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார், இயக்குனர் ஜியேன் கிருஷ்ணகுமார், விவேக் பிரசன்னா, ராஜ் ஐயப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த சக்ஸஸ் விழாவில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி " சென்ற வாரம் வெளியான படங்களின் 'ரன் பேபி ரன்' திரைப்படத்துக்கு பெரிய திரையரங்கில் சின்ன ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டது. ஆனால் மக்கள் மத்தியில் படத்திற்கு கிடைத்த எதிர்பார்ப்பை பார்த்து திங்கட்கிழமை முதல் பெரிய திரையரங்குகளில் பெரிய ஸ்க்ரீன் நான்கு காட்சிகள் கொடுத்தார்கள். அவ்வளவு எளிதில் ஒரு மிட் சைஸ் படங்களுக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்படாது. அப்படி இருக்கையில் பெரிய திரையரங்குகளில் மெயின் ஸ்க்ரீன்களில் ரன் பேபி ரன் திரைப்படத்தை திரையிடுவது மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது.
இது போன்ற படங்களுக்கு விளம்பரம் மிகவும் முக்கியம். அதிகாலை 5 மணிக்கு முதல் காட்சிக்கே 5000 ரசிகர்கள் பார்க்கும் அளவிற்கு பெரிய சைஸ் திரைப்படம் இது அல்ல என்பதால் இப்படி ஒரு படம் வெளியாகியுள்ளது என்பதை மக்களுக்கு தெரிவிக்கவேண்டியது அவசியம். முதலில் மக்கள் இப்படத்திற்கு எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்வார்கள் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் படம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை எங்களுடைய ஒட்டுமொத்த குழுவும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும். திட்டமிட்டபடி அனைத்தும் முடிந்து பிளான் செய்தபடி வெளியிட முடிந்தது.
ஒரு காமெடி கதாபாத்திரத்தில் கத்தி பேசி சுலபமாக நடித்து விடலாம் ஆனால் ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது அவ்வளவு எளிதல்ல அது மிகவும் கஷ்டம். என்னுடைய கம்ஃபர்ட் லெவலில் இருந்து நான் வெளியில் வந்து வேறு ஒரு ஜானரில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். மற்றவர்கள் என்னை வைத்து எப்படி படம் எடுக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் என நினைத்தேன். நான் நடித்து விட்டேன் ஆனால் மற்றவர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா என்ற பயம் இருந்தது. ஆனால் இன்று படம் நன்றாக போகிறது, பாராட்டுகிறார்கள் எனும்போது அது என்னுடைய முயற்சிக்கு கிடைத்த சர்டிஃபிகேட்டாக கருதுகிறேன். இதுவரையில் என்னுடைய எந்த படத்திற்கும் கிடைக்காத அன்பு இப்படத்திற்காக எனக்கு கிடைத்தது. ஜெயம் ரவி, ஆர்யா, கௌதம் கார்த்திக், கார்த்தி, விக்ரம் பிரபு, பரத் என பலரும் என்னை தொடர்புகொண்டு வாழ்த்தினர். இப்படத்தை வெற்றிப்படமாகிய படக்குழுவினர், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
ஒரு பெரிய ஸ்டார் நடித்த திரைப்படம் என்றால் மக்கள் கூட்டம் அலைமோதும் மற்ற படங்களுக்கு விளம்பரம் மிகவும் முக்கியம். எங்களுடைய ரன் பேபி ரன் திரைப்படத்திற்கு அது மிகவும் நன்றாக அமைந்தது. முதல் வாரத்தை காட்டிலும் இரண்டாவது மூன்றாவது வாரங்களில் அமோகமான வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மீடியா, சோசியல் மீடியாவில் 360 டிகிரி விளம்பரம் செய்ததற்கு காரணம் இப்படி ஒரு படம் இருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என நினைத்தோம். அது தெரிந்தது. படம் நன்றாக இருக்கிறதே ஒரு முறை பார்க்கலாமே என்ற அந்த எண்ணத்தை கொண்டு வரவேண்டும் என நினைத்தோம். படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்காதவர்கள் பார்க்க வேண்டும்" என்றார் ஆர்.ஜே. பாலாஜி.