RJ Balaji: வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியானத் திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இதன் வெற்றி விழா இன்று நடைபெற்றது. அதில், படத்தின் இசைமைப்பாளர் ஜாவித், பாடலாசிரியர் உமா தேவி, நடிகர்கள் இமான் அண்ணாச்சி, சின்னி ஜெயந்த், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் கோகுல் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

 

நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “சிங்கப்பூர் சலூன் படம் வெற்றி அடைந்துள்ளதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாதியில் அரவிந்த் சுவாமி சார் கதாபாத்திரம் பார்த்துவிட்டு இவரைப் போல ஒருவர் நம் வாழ்வில் வந்துவிட மாட்டார்களா? என நிறையப் பேர் சொன்னார்கள். அப்படி சிறப்பான நடிப்பைக் கொடுத்த அவருக்கு நன்றி. படம் வெளியாகி முதல் வாரத்தில் பார்வையாளர்களுக்குப் பிடித்து, இரண்டாவது வாரத்தில் படத்திற்கு புஷ் கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த சக்சஸ் மீட் நடத்துவதற்கான காரணம். அப்படி, எங்கள் படமும் பார்வையாளர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று. ’சவுத் இந்தியன் அமீர்கான்’ என என்னை சின்னி ஜெயந்த் சார் சொன்னதும் எனக்கு பயம் வந்துவிட்டது. அவர் பெரிய லெஜெண்ட். அவருடன் என்னை ஒப்பிடவே முடியாது. அந்தப் பட்டம் எனக்கு வேண்டாம். படத்திற்கு ஆரம்பத்திலும் முடிவிலும் நல்லதாக எழுதுங்கள் என இமான் அண்ணாச்சி சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை. மீடியாவுக்கு அவர்கள் கருத்தை சொல்ல எல்லா சுதந்திரமும் உண்டு. 

எல்.கே.ஜி., மூக்குத்தி அம்மன் பார்ட் 2:


அதேபோல, மக்களுக்காக நாங்கள் எடுத்த படம் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய சிறந்த நடிப்பைக் வெளிக்கொண்டு வந்த இயக்குநர் கோகுலுக்கு நன்றி. ஐசரி கணேஷ் சார் எனக்கு அப்பா போன்ற நெருங்கிய உறவும் அன்பும் கொண்டவர். ’எல்.கே.ஜி2’, ‘மூக்குத்தி அம்மன்2’ போன்ற ஐடியாவும் உண்டு. அதையும் ஐசரி சாரிடம்தான் செய்வேன். இரத்தம், கத்தி போன்ற படங்களுக்கு மத்தியில் நிறைய பேருக்கு சிறு நம்பிக்கைத் தரும் விதமாக ‘சிங்கப்பூர் சலூன்’ வந்துள்ளது. அது இரண்டாம் வாரத்திலும் இன்னும் சிறப்பாக ஓட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என பேசியுள்ளார்.

 

படத்தின் இயக்குநர் கோகுல் பேசும்போது, “’சிங்கப்பூர் சலூன்’ படம் மூலம் என் கனவு இன்னும் அருகில் வந்துள்ளது. இந்தப் படத்திற்காக சிகை அலங்காரக் கலைஞர்கள் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது அதில் ஒருவர், ‘என் கத்தி செய்யாததை இந்த கதை செய்திருக்கிறது’ என்று சொன்னார். என் படத்தின் நோக்கம் நிறைவேறியது என்று மகிழ்ந்த தருணம் அது. அவர்களை ஒரு சாதியாக கட்டமைத்து விட்டோம். நான் சாதிக்கு அப்பாற்பட்டவன். அதனால்தான் படத்தின் ஆரம்பத்தில் ஒரு இஸ்லாமிய பார்பரை காட்டியிருப்பேன். இது குலத்தொழில் கிடையாது. இந்த விஷயம் உங்கள் அனைவருக்கும் போய் சேர்ந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. இதற்கு ஒத்துழைத்த ஹீரோ பாலாஜி, தயாரிப்பாளர் ஐசரி சார், படக்குழுவினருக்கு நன்றி. நான் இயக்கியப் படங்களிலேயே இதுதான் எனக்கு சிறந்தப் படம்” என பேசியுள்ளார்.