தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்:


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதனிடையே தமிழ்நாடு அரசின் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.


 


இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகின்ற பிப்ரவரி 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டியுள்ளார். அந்த கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார். மேலும், தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று தாக்கல் செய்ய இருக்கிறார். தொடர்ந்து பிப்ரவரி 20 ஆம் தேதி 2024-2015 ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கையினையும், வருகிற 21 ஆம் தேதி 2023-2024 ஆம் ஆண்டிற்கான முன்பண செலவு மானியக் கோரிக்கையினையும் தாக்கல் செய்ய உள்ளார்" என்று கூறினார்.


முழு உரிமை உண்டு:


பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினரை எங்கே அமர வைக்க வேண்டும் என்ற முழு உரிமையும் சட்டப்பேரவை தலைவருக்குத்தான் உண்டு என்பதை நானும் சொல்கிறேன் இதுக்கு முன்னதாக இருந்த சபாநாயகர் தனபாலும் கூறியிருக்கிறார். அதைநான் பலமுறை கூறியிருக்கிறேன். திரும்பவும் நினைவுபடுத்துகிறேன்" என்றார். 


சட்டமன்ற கூட்டத்தொடர் நேரலை செய்யப்படுமா என்ற கேள்விக்கு, "மறைந்த முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் தான் சட்டமன்ற கூட்டத்தொடரை நேரலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக, சட்டமன்றத்தில் நேரலையாக காண்பிக்க முடியாது என்று எழுதிக்கொடுத்தார்கள். அந்த வழக்கில் தான் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலுமணியும் தன்னை இணைத்துக் கொண்டு முழுமையாக நேரலை நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.


திமுக அரசின் எண்ணம்:


ஆனால், சட்டமன்றக் கூட்டத்தொடரை முழுமையாக நேரலையில் காண்பிக்க வேண்டும் என்பது தான் திமுக அரசின் எண்ணம். தற்போது ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. முதல் கட்டமாக கேள்வி பதில்கள் முழுமையாக காட்டப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சில முக்கிய கவனஈர்ப்புத் தீர்மானங்கள் , அரசின் முக்கிய தீர்மானங்கள் எல்லாம் தொடர்ந்து காண்பிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. மீதியிருக்கின்ற மானியக்கோரிக்கைகளையும் முழுமையாக காண்பிக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். அதற்கான பணிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்" என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.