திரெளபதி இயக்குநரின் அடுத்த படமான ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியான நிலையில், காலை டிரைலர் குறித்த அறிவிப்பை இயக்குநர் மோகன் ஜி வெளியிட்டார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட அவர் “ஒரு முள்ளை அகற்ற இன்னொரு முள் தேவைபடுகிறது. இன்று மாலை 05:06 மணிக்கு டிரெய்லர் வெளியாகும்.. காத்திருந்து விழிப்புணர்வு பெறுங்கள் " என குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, தற்போது டிரெய்லர் வெளியானது. இந்த படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இதுதான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க கூடுதல் காரணமாக உள்ளது. மேலும் திரௌபதி படத்தில் கதாநாயகனாக நடித்த ரிச்சர்ட் கதாநாயகனாக நடிக்க தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்துள்ளார். ராதாரவி, தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை மோகனே தயாரித்து இயக்குகிறார். 7ஜி ஃபிலிம்ஸ் சிவா இதன் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளார். திரௌபதி படத்தின் வெளியீட்டு உரிமையையும் இவர்தான் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது முதல் படத்தில் நாடகக் காதல் பற்றிய பேசிய இயக்குநர் மோகன்.ஜி, இதில், ரிச்சர்ட் போலீசாக நடித்துள்ளார். போதைப்பொருட்களில் பழக்கத்தால் இளம்பெண்கள் எப்படி சீரழிகிறார்கள். மதமாற்றம் மற்றும் இந்து மதத்தை இழிவு செய்கிறார்கள் என்பது குறித்தும் பேசும் வசனங்கள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது. பிசிஆர் சட்டம் தொடர்பான கதையாக இருக்கும் என்று டிரெய்லரில் தெரிகிறது. வழக்கம்போல இந்த ட்ரெய்லருக்கும் எதிர்ப்பும், ஆதரவான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது.
முன்னதாக மோகன் ஜி வண்ணாரப் பேட்டை, திரௌபதி ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருந்தார். இதில்திரௌபதி படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தபடத்தில் ஷாலினியின் அண்ணனும் , நடிகர் அஜித்தின் மைத்துனனுமான ரிச்சர்ட்தான் நடித்திருந்தார். இந்தபடத்தை குறிப்பிட்ட சமுக்கத்தினர் எதிர்த்தனர், குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதரித்தனர். ஊடகங்களிலும் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது திரௌபதி. எது எப்படியோ இந்த படத்தை தயாரித்து கொடுத்த ஜி.எம். ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அதிர்ஷடம்தான். குறைந்த பட்ஜெட் முதலீட்டில் எடுக்கப்பட்ட திரௌபதி படம் நல்ல லாபம் பெற்றுத்தந்தது. அதேபோல நடிகர் ரிச்சர்ட்டின் நடிப்பையும் பலர் வெகுவாக பாராட்டியிருந்தனர். படம் ரிலீஸான சமயத்தில் , திரையரங்கில் அமர்ந்து தனது அண்ணனும் கதநாயகனுமான ரிச்சர்ட்டுடன் அமர்ந்து ஷாலினியும் ஷாமிலியும் படம் பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியதும் குறிப்பிடத்தக்கது.