Hombale Films தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் காந்தாரா. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். கர்நாடக மாநிலத்தின் துளு பேசும் மக்கள் இன்றும் பின்பற்றி வரும் சடங்குகளில் முக்கியமான ஒன்று பூத கோலா. இந்த தெய்வ வழிபாட்டையும், காடுகளுக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் அடிப்படையாக வைத்து ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி பிளாக்பஸ்ட் ஹிட் ஆனது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பிறமொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. ரூ.16 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம்  ரூ. 400 கோடி வசூல் சாதனை படைத்தது. 

பிரபல நடிகர் மரணம்

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான காந்தாரா: சாப்டர் 1 படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கினார். முதல் பாகத்திற்கு முந்தைய கதையை கூறும் படமாக காந்தாரா: சாப்டர் 1  இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே ஜூனியர் ஆக்டர் விஜூ வி.கே., விடுதியில் தங்கியிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரைத்தொடர்ந்து பிரபல கன்னட நடிகர் ராகேஷ் புஜாரி மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

அடுத்தடுத்து நடக்கும் விபத்து

முன்னதாக, படப்பிடிப்புக்கு செல்லும்போது நடிகர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக இதில் யாரும் உயிரிழக்கவில்லை. மேலும், காந்தாரா 2 படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர் கபில் கேரளாவில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். காந்தாரா 2ஆம் பாகம் படப்பிடிப்பின் போது நடக்கும் விபத்துகளும் நடிகர்களின் உயிரிழப்புகள் குறித்த செய்திகள் வெளியான நிலையில், தெய்வம் பழிவாங்குவதாக கூறப்பட்டது. இருப்பினும் ரிஷப் ஷெட்டி விறுவிறுப்புடன் காந்தாரா 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார். 

நான் கும்பிட்ட தெய்வம் கைவிடலை

காந்தாரா: சாப்டர் 1 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், இப்படத்தின் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி காந்தாரா: சாப்டர் 1 உருவான விதத்தை விளக்குவது போன்றும் படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களின் வீடியோவும் வெளியாகியிருக்கிறது. இதில், நானம் நம்புன தெய்வம் கைவிடவில்லை என்றும் ரிஷப் ஷெட்டி தெரிவித்திருக்கிறார். பிரம்மாண்ட செட் அமைத்து கடின உழைப்புடன் படப்பிடிப்பை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. கன்னட திரையுலகில் கேஜிஎப் படத்திற்கு பிறகு பிரம்மாண்ட செலவில் உருவாகும் படம் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.