சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோகளாக ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன், ரெடி ஸ்டேடி போ உள்ளிட்ட  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளராக, சரவணன் மீனாட்சி சீரியல் ஹீரோவாக இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்களில் ஒருவரான ரியோ ராஜ் இன்று தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். 

Continues below advertisement


 




2017ம் ஆண்டு வெளியான சத்ரியன் படத்தில் துணை கதாபாத்திரமாக சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அதை தொடர்ந்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் அவரால் பெரிய அளவில் வெற்றி பெறமுடியவில்லை. அந்த சமயத்தில் தான் அவருக்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியில் சிறப்பாக  விளையாடினார். அவர் தான் டைட்டில் வின்னர் பட்டம் பெறுவார் என எதிர்பார்த்து இருந்த நிலையில் 2வது ரன்னர் அப்பாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதற்கு பிறகு அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிய துவங்கின. 


 




கடைசியாக ரியோ ராஜ் நடிப்பில் வெளியான 'ஜோ' மிக பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது. அறிமுக இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் வெளியான அப்படத்தில் மாளவிகா மனோஜ், பாவ்யா திரிவிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் மற்றுமொரு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.


டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரொமான்டிக் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் தான் துவங்கியது என்றாலும் அதற்குள் படப்பிடிப்பு முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது. அதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


திருமணமான ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் மீண்டும் ரியோ ராஜுடன் ஜோடி சேர்ந்துள்ளார் மாளவிகா மனோஜ். சரியாக திட்டமிட்டு அதற்கு ஏற்றபடி படப்பிடிப்பை முடித்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. விரைவில் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு, டிரைலர் மற்றும் டீஸர்  ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடுமையான உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் நம்முடைய குறிக்கோளை அடையலாம் என்பதற்கு உதாரணமாக இருக்கும் ரியோ ராஜ் மேலும் பல படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வளர வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் விருப்பமாகும்.