இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் "லா அண்ட் ஆர்டர்: ஸ்பெஷல் விக்டிம்ஸ் யூனிட்", உட்பட பல NBC குற்ற நாடகங்களில் டிடெக்டிவ் ஜான் மன்ச்சில் என்கிற பிரபல பாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகரும் குணச்சித்திர நடிகருமான ரிச்சர்ட் பெல்சர் மறைந்தார். இதனை அவரது மேலாளர் தெரிவித்துள்ளார். மறைந்த ரிச்சர்ட் பெல்சருக்கு வயது 78.
பெல்சர் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிரான்சில் உள்ள அவரது வீட்டில் மறைந்தார் என அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.
நடிகரின் நீண்டகால நண்பரான எழுத்தாளர் பில் ஷெஃப்ட் ஊடகத்திடம் பகிர்ந்துகொண்ட தகவலில் அவருக்கு நிறைய உடல்நலப் பிரச்னைகள் இருந்ததாகவும் அதனால் நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
1993 முதல் 1999 வரை ஒளிபரப்பான என்பிசியின் "ஹோமிசைட்: லைஃப் ஆன் தி ஸ்ட்ரீட்" இல் முதன்முதலில் தோன்றிய டிடெக்டிவ் மன்ச் பாத்திரத்திற்காக பெல்சர் புகழ் பெற்றார். 2000ம் ஆண்டில் "ஹோமிசைட்: தி மூவி" என்ற திரைப்படத்தில் அந்த பாத்திரத்தை மீண்டும் நடித்தார். இதை அடுத்து பிரபல தொடரான லா அண்ட் ஆர்டரில் அதே பாத்திரத்தில் நான்கு அத்தியாயங்களில் தோன்றினார்.
பின்னர் பெல்சர் லா அண்ட் ஆர்டரின் மற்றொரு பாகத்தில் தோன்றிய நிலையில் அதில் தொடர்ச்சியாக மன்ச் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். நீண்ட நாள் ஒளிபரப்பான இந்தத் தொடரில் 1999 மற்றும் 2016க்கு இடையில் 326 அத்தியாயங்களில் தோன்றினார். அவரது பாத்திரம் 2013ல் ஓய்வு பெற்றாலும், அவர் வெளியேறிய பிறகு இரண்டு கூடுதல் அத்தியாயங்களில் நடித்தார்.
பெல்சரைப் போலவே, அவரது கதாப்பாத்திரமும் யூத பின்னணி மற்றும் நகைச்சுவை உணர்வு ஆகியவற்றைக் கொண்டிருந்தது. அவரது அலட்சியமான, புத்திசாலித்தனமான, கண்ணாடி அணிந்த டிடெக்டிவ் கதாப்பாத்திரம் தொலைக்காட்சி குற்றத் தொடர்களில் ஒரு தனி முத்திரை பதித்தது.