திமுகவில் கருணாநிதியுடன் மிக நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா மறைவு செய்தி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அவரைப் பற்றிய தகவல்களை காணலாம்.
கடந்த 1941 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் கிராமத்தில் பிறந்தவர் தான் எஸ்.என்.எம். உபயதுல்லா. சிறுவயது முதலே திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், ஆரம்பகட்டத்திலேயே திமுகவில் இணைந்து, அந்த கட்சியின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்.
பிறந்தது ராமநாதபுரமாக இருந்தாலும், அடுத்த சில வருடங்களிலேயே அவரது குடும்பம் தஞ்சாவூருக்கு குடிபெயர்ந்தது. ஆரம்பத்தில் லாட்டரி சீட்டு தொழில் செய்து வந்த உபயதுல்லா பின்னர் ஜவுளி வியாபாரம், பேன்ஸி பொருட்கள் கடையும் நடத்தி வந்தார். இதன்மூலம் ஏற்பட்ட தொடர்பு அவருக்கான செல்வாக்காக மாறியது.
திமுகவில் உபயதுல்லா செயல்பாடுகள் முன்னாள் திமுக தலைவரான கருணாநிதியை வெகுவாக ஈர்த்தது. 1962 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து அவரின் நன்மதிப்பை உபயதுல்லா பெற்றார். இதன் காரணமாக கருணாநிதி உபயதுல்லாவுக்கு 1989 ஆம் ஆண்டு முதல் தேர்தல் தொடங்கி பல தேர்தல்களிலும் வாய்ப்பளித்தார்.
திமுக நகர செயலாளராக 1987 ஆம் ஆண்டு தொடங்கி 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 27 ஆண்டுகள் பணியாற்றிய அவர் 1989, 1996, 2001,2006 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். இதில் 2006 -2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் வணிகவரித்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
அதேசமயம் அரசியல் தாண்டி தமிழ் மொழி மீது பற்று கொண்டிருந்தார் உபயதுல்லா. இதனால் தஞ்சை முத்தமிழ் மன்றத்தை நடத்தி வந்ததோடு, தான் பேசும் கூட்டங்களில் எல்லாம் அதீத ஈர்ப்பு கொண்ட திருக்குறளை மேற்கோள் காட்டி தான் பேசுவார் என்பது கடைநிலை திமுக தொண்டருக்கு கூட தெரியும்.
இதற்காகவே 2020 ஆம் ஆண்டு கலைஞர் விருதையும், கடந்த மாதம் நடந்த பேரறிஞர் அண்ணா விருதையும் உபயதுல்லா பெற்றார். இதனிடையே உபயதுல்லா தங்கையின் பேரனின் திருமணம் நேற்று நடந்தது. இதற்காக தஞ்சாவூருக்கு உறவினர்கள் வருகை தந்த வண்ணம் இருந்தனர்.
ஆனால் திருமணத்திற்கு புறப்பட்ட உபயதுல்லாவுக்கோ லேசான மயக்கம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் திருமண வீடு சோகமாக மாறியது. அவரது உடலுக்கு உறவினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உபயதுல்லா இறுதிச்சடங்கு ஆத்துப்பாலத்தில் உள்ள ஜூம்மா பள்ளிவாசலில் இன்று நடைபெறுகிறது. இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திமுகவின் மிகப்பெரிய தூணாகவும், மாறாத கொள்கை பற்றாளராகவும் திகழ்ந்த உபயதுல்லா மறைவு கழகத்துக்கு பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.