எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து அதிகார போட்டி நிலவி வருகிறது. கேரளா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, பஞ்சாப், மேற்குவங்கம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதிக்கும் ஆளுநர்கள்:


மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் காலதாமதம் செய்வதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தாமதிப்பதாக கூறி, கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


தெலங்கானா அரசை தொடர்ந்து தமிழ்நாடு அரசும் உச்ச நீதிமன்றத்தை நாடியது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பும் மசோதாக்களை அவர் வேண்டுமென்றே தாமதிப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த நிலையில், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக அம்மாநில அரசு இரண்டாவது வழக்கை தொடர்ந்துள்ளது. முக்கியமான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மாநில மக்களின் உரிமைகளை பறிக்க ஆளுநர் முயற்சிப்பதாகவும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


2 வாரங்களில் 2வது வழக்கு:


நீதிமன்றத்தில் ஆஜரான கேரள அரசு தரப்பு வழக்கறிஞர் சி.கே.சசி, "தன்னிச்சையாக செயல்படும் ஆளுநர், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது கேரள மக்களின் வாழ்வுரிமையை மீறும் வகையில் உள்ளது. கூடுதலாக, இந்திய அரசியலமைப்பு சட்டம் 21வது பிரிவின் கீழ் கேரள மாநில மக்களின் உரிமைகளை இது பறிக்கிறது. இதன் மூலம், மாநில சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட பொதுநலச் சட்டத்தின் பலன்கள் மக்களுக்கு மறுக்கப்படுகிறது.


மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால அவகாசத்தை நிர்ணயிக்க கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  ஆனால், கடந்தாண்டு, கேரள உயர் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தற்போது, 461 பக்க மனுவை தாக்கல் செய்துள்ளது.


கேரள அரசின் சார்பாஜ ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே. கே. வேணுகோபால், "அவருக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகும் கவர்னர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். எட்டு முக்கிய மசோதாக்கள் தற்போது கேரள ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன. இந்த மசோதாக்களில் சில இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளன" என்றார்.


"பல மசோதாக்கள், பொது நலன்களை உள்ளடக்கியது. சமூக நலன்சார்ந்த நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. காலதாமதம் காரணமாக மாநில மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது" என கேரள அரசு தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.


இதையும் படிக்க: சுவாசிக்க முடியாமல் திணறும் கிரிக்கெட் வீரர்கள்.. உலகக்கோப்பையை உலுக்கி எடுக்கும் காற்று மாசு