தமிழ் சினிமா கண்ட துணிச்சலான நடிகைகளில் ஒருவர் ராதிகா சரத்குமார். 1978-ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படம் அறிமுகமான ராதிகா சரத்குமார் இன்று தனது 45 ஆண்டுகால திரைப் பயணத்தை நிறைவு செய்துள்ளார். 


ஆளுமையான நடிகை :


ஆளுமையான நடிகைகளில் ஒருவரான நடிகை ராதிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தனது சிறப்பான, யதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு தனி ராஜாங்கத்தை உருவாக்கியவர். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் 'சித்தி' என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு ஒரு பாசமான பந்தத்தை உருவாக்கியவர். அவரின் சிறப்பான நடிப்பிற்காக ஏராளமான விருதுகளை குவித்தவர்.



தனி முத்திரை பதித்தவர் :


தொடர்ந்து பல சவாலான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தும் ராதிகா சரத்குமார் ஒரு நடிகையாக, தயாரிப்பாளராக மட்டுமின்றி ஒரு சுய தொழில் பெண்மணியாகவும் பல பெண்களுக்கு மிக பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார். எம்.ஆர். ராதா என மிக பெரிய ஜாம்பவானின் மகள் என்ற அடையாளத்துடன் திரைத்துறையில் நுழைந்தாலும் தனது விடாமுயற்சியாலும் கடினமான உழைப்பாலும் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் ராதிகா என்றால் அது மிகையல்ல.  


கணவருடன் கொண்டாட்டம் :


ராதிகா சரத்குமார் தனது வெற்றிகரமான 45 ஆண்டுகால திரைப் பயணத்தை நிறைவு செய்ததை ஒட்டி தனது கணவர் சரத்துக்குமாருடன் கேக் வெட்டி இந்த தருணத்தை கொண்டாடினார். அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். 


'ரிவால்வர் ரீட்டா' படக்குழு கொண்டாட்டம் :


அதனை தொடர்ந்து சந்துரு இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் திரைப்படம் "ரிவால்வர் ரீட்டா". இப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படக்குழுவினர் ராதிகாவின் 45 ஆண்டு கால திரை பயணத்தை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அதன் புகைப்படங்கள் மட்டுமின்றி 'பூவரசம்பூ பூத்தாச்சு' என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க கேக் வெட்டி கொண்டாடும் வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகி பகிரப்பட்டு வருகின்றன. 


ராதிகா சரத்குமாரை போலவே நடிகை கீர்த்தி சுரேஷும் மிகவும் திறமையான துணிச்சலான நடிகை என்பதையும் அவரின் பல படங்கள் மூலம் நிரூபித்தவர்.