கடந்த ஜனவரி மாதம் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம் ஒட்டுமொத்த இந்தி திரையுலகையும் மிரள வைத்தது. பதான் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் ரசிகர்களுக்கு பூஸ்டர் படமாக உள்ளது ஜவான். படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஷாருக்கான் ரசிகர்கள், ஜவான் படத்தின் ஒவ்வொரு அட்டேட்களையும் தெறிக்கவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜவான் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வந்த இடம்’ பாடலின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.  


அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்திருக்கும் படம் ஜவான். தமிழில் ராஜா ராணி படத்தை எடுத்து பிரபலமான அட்லீ, முதன்முதலாக பாலிவுட்டில் படம் இயக்கியுள்ளார். அதுவும் பாலிவுட் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து பிரமாண்ட பொருட்செலவில் ஜவான் படமாக்கப்பட்டுள்ளது.


அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை கொண்ட ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் ஜவான் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகிறது. 


இந்த நிலையில் கடந்த மாதம் வெளியான ஜவான் படத்தின் ட்ரெயிலர் மிரட்டல் ஆக்‌ஷனை கொடுத்துள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ஏற்ப அனிருத்தின் பிஜிஎம் இசையும் எகிற வைத்துள்ளது. ட்ரெயிலரில் மொட்டை அடித்து இருக்கும் ஷாருக்கான் ரயிலில் ஏறி அதகளப்படுத்தி உள்ளார். ஜவான் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் பதான் படத்தை போல ஜவானும் மிரட்டலான ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும் எனக் கூறி வருகின்றனர். 


ஜவான் படத்தின் முதல் சிங்கிளான ‘வந்த எடம்’ பாடல் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. அனிருத் பாடிய அந்த பாடலில் ஷாருக்கானுடன் பிரியாமணி உள்ளிட்ட ஏராளமானோர் இணைந்து நடனமாடியுள்ளனர். தற்போது வரை 11 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ள வந்த எடம் பாடல், டிரெண்டிங்கிலும் நம்பர் ஒன்னாக உள்ளது. இந்த நிலையில் வந்த எடம் பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.






அதில், ஷாருக்கானுக்கு அட்லீ தமிழ் கற்றுத் தரும் காட்சி இடம்பெற்றுள்ளது. தமிழ் அர்த்தத்தை கேட்டு தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நடனத்தில் அசத்தி இருக்கிறார் ஷாருக்கான். படப்பிடிப்பின் போதும் அனைவரிடமும் இயல்பாக நட்புடன் இருக்கும் ஷாருக்கானின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.