”ஜூன் போனால், ஜூலை காற்றே… கண் பார்த்தால் காதல் காற்றே….” இந்த பாடல் வெளியான நேரத்தில், பெரும்பாலானோரின் ரிங்டோன் இதுதான். சலிக்காமல் நாளொன்றுக்கு 10-15 முறை கேட்டது உண்டு. டிவியில் எத்தனை முறை ஒளிபரப்பினாலும், எந்த வேலையில் இருந்தாலும் நின்று நிதானமாக பாடலை முழுமையாக ரசித்துவிட்டுதான் நகர்ந்து செல்வது!


பாடலைப் போலவே, பாடல் இடம் பெற்றிருந்த படமும் செம ஹிட்! வழக்கமான ஒரு காதல் கதையாக இல்லாமல், மிக எதார்த்தமாய் காதல், நட்பு என எல்லாவற்றையும் ’உன்னாலே உன்னாலே’ படத்தில் கடத்தியிருப்பார் இயக்குனர். படத்தின் இன்னொரு சிறப்பம்சம், படத்தின் ஒளிப்பதிவு. ’உன்னாலே உன்னாலே’ படத்தை பார்த்துவிட்டு ஆஸ்திரேலியா போகனும்னு நிறைய பேர் ஆசைப்பட்டிருக்கலாம்.



சரி, ’உன்னாலே உன்னாலே’வை கொண்டாடியாச்சு. இந்த படம் வெளியான அதே ஆண்டுதான் அப்படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர் ஜீவா மறைந்தார். இப்படத்தை கொண்டாடியபடியே இவர் இயக்கிய மற்ற திரைப்படங்கள் என்னென்ன என்று தேடியபோது, ஆச்சர்யமாக இருந்தது.


12பி, உள்ளம் கேட்குமே, இந்த வரிசையில் அடுத்து தாம் தூம் என இவர் இயக்கிய அனைத்து படங்களும் இப்போது டிவியில் ஒளிபரப்பினாலும் மிஸ் பண்ணாது பார்க்கும் ஹிட் படங்கள்.



இவர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைப்பாளர். ஹாரிஸ் ஜெயராஜின் இசை பயணம் ‘peak’ல் இருந்தபோது அவர் ஜீவாவோடு பணியாற்றி உள்ளார். இந்த காம்போ இன்னும் சில படங்களுக்கு நீடித்திருந்தால், வேற லெவல் பாடல்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்திற்கும். மிஸ் ஆகிடுச்சு!


விரல்விட்டு எண்ணும் அளவிலேயே இவர் படங்களை இயக்கி இருந்தாலும், இவர் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளர். இவர் இயக்கிய படங்களுக்கு இவரே ஒளிப்பதிவும் செய்துள்ளார். ஆனால், இயக்குனராக இவர் மாறும் முன் பல ஹிட் படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமிடம் பணியாற்றிய இவர், பின்பு பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். காதலன், ஜென்டில்மேன், இந்தியன், உல்லாசம், வாலி, குஷி, ரன், சண்டக்கோழி, சச்சின் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.



தமிழ் சினிமாவில் கவனிக்க வைத்த ஒளிப்பதிவாளராக தனது பயணத்தை தொடங்கி, தவிர்க்க முடியாத இயக்குனராகவும் தன்னை நிரூபித்த இயக்குனர், ஒளிப்பதிவாளர் ஜீவா தனது 43 வயதில் மறைந்துவிட்டார். இன்று, ஜூன் 26-ம் தேதி ஜீவாவின் நினைவு நாள். 2007-ம் ஆண்டு, உடல் நல பாதிப்பு காரணமாக ’தாம் தூம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அவர் இறந்துவிட்டார்.


ஆனால், இன்றும் ஜீவா இயக்கிய படங்கள், ஒளிப்பதிவு செய்த காட்சிகளை கண்டு ரசிக்கும்போது அவரைப் பற்றிய நினைவுகளும் உடன் இருக்கும்! தேங்க்யூ ஜீவா!