தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைப்பதற்காக தயாரிப்பாளர்கள் தரப்பு அவரிடம் பேசி வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை இத்தகவல் ஏதும் உறுதி செய்யப்படாதா ஒன்றாகவே உள்ளது. ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் இத்திரைப்படத்தை இந்தாண்டின் பிற்பகுதியிலோ அல்லது அடுத்தாண்டின் தொடக்கத்திலோ வெளியிட படத்தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளது.
அதிகாரபூர்வமற்ற தகவல் இல்லை என்றாலும் ட்விட்டரில் இது குறித்து ரசிகர்கள் அதிகம் பேசி வருகின்றனர். #nayanthara என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அதேபோல் #atlee என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டாடி வருகிறது.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன் தாரா கடந்த 2003ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனசினகாரே என்ற திரைப்படம் மூலம் முதன்முதலாக திரையுலகத்திற்கு அறிமுகமானார். கடந்த 2005ஆம் ஆண்டில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமான நடிகை நயன் தாரா, நடிகர் ரஜினி உடன் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த்திரையுலகின் முக்கிய நடிகையாக வலம் வந்தார். விஜய், அஜித், சூர்யா என தமிழின் முன்னணி கதாநாயகர்கள் உடன் ஜோடியாக நடித்துவந்த நிலையில் வில்லு திரைப்பட படப்பிடிப்பின்போது இயக்குநர் பிரபுதேவா உடன் நயன் தாரா காதல் வயப்பட்டார். பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியான நிலையில், இயக்குநர் பிரபுதேவா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார்.
பின்னர் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வதற்காக இந்து மதத்திற்கும் நடிகை நயன் தாரா மாறினார். இந்த நிலையில் திடீரென இருவரும் பிரிந்தனர். 2010ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை படங்களை நடிப்பத்தை நிறுத்தி இருந்த நயன்தாரா, இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான ராஜாராணி திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். பெண்களுக்கான வலுவான கதாபாத்திரத்தை கொண்ட திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்ததன் மூலம் பெண் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ள நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த, இயக்குநர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மூன்று ஆண்டுகள் திரையுலகை விட்டு சென்றிருந்தாலும் மீண்டும் நடிக்க வந்து பெண் சூப்பர் ஸ்டாரான நயன்தாரா பாலிவுட்டிலும் ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.