நா. முத்துகுமார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத, மறக்க முடியாத ஒரு பெயர். குறிப்பிட்ட பாடலாசிரியர்கள் கோலோச்சிய சமயத்தில் தமிழ் சினிமாவில் கால்பதித்து தனக்கென தனி பாதையை வகுத்துக் கொண்டவர். சின்னப்படம், பெரியப்படம், புது இயக்குநர், பிரபல இயக்குநர் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் தன்னுடைய வரிகளை பாகுபாடு இல்லாமல் பதிய வைத்தவர். காதல் பாடல்களில் இரட்டை அர்த்த வார்த்தைகள் வைத்து ரொமான்ஸ் பேசிய காலக்கட்டத்தில் உள்ளே வந்த நாமு, தான் எழுதிய காதல் பாடல்களில் தத்துவங்களை புகுத்தினார்.
காதல் பாடல்களில் ஏன் தத்துவம்? என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? அதே கேள்வி நாமுவிடம் கேட்கப்பட்டது. ‘கவிஞர் கண்ணதாசனுக்கு கிடைத்ததுபோல எங்களுக்கெல்லாம் கதைக்களமும், பாடல் சூழலும் கிடைக்கவில்லை. பெரும்பாலும் காதல் பாடலாகவே அமைந்துவிட்டது. அதனால் காதல் பாடல்களிலேயே தத்துவ வரிகளை நான் வைத்தேன்’ என்றார்.
நாமுவின் பாடல்களை வரிகளாக எழுதி மெல்லப்படித்தால் அதில் பல கவிதைகள் இருக்கும். கவிதைகளை அழகாக கோர்த்து வரிகளாக கொடுத்துவிடுவதில் நாயகன் நாமு. அதேபோல் ஒரே வரியில் மொத்த வலியையும், மொத்த காதலையையும் புகுத்தி யோசிக்க வைத்துவிடுவதிலும் கில்லாடி. 'காதல் கொண்டேன்’ படத்தில் வரும் ’தேவதையைக் கண்டேன்’ பாடலில் ஒரு வரி வரும், ’’தனித்தீவில் கடை வைத்தேன்’’. இந்த மூன்று வார்த்தைகள் உங்கள் கண்களுக்கு முன்னால் காட்சிகளாகவே விரியும். எப்படியோரு தனிமை அது? யாருமில்லாத தனித்தீவில் கடை வைத்திருப்பவரின் மனநிலையை யோசித்துப்பாருங்கள்? அது ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய தனிமை. அன்புக்கு ஏங்கும், தனிமையில் வாடும் ஒரு இளைஞனின் மனநிலையை பிரதிபலிக்கும் அந்த பாடலுக்கு இந்த 3 வார்த்தைகளே மொத்த உயிரையும் கொடுத்துவிடும்.
பாடல்களுக்கு பயன்படுத்தும் உருவகங்களை தொடர்ந்து பயன்படுத்தும் நாமு, கதைக்களத்திற்கு ஏற்ப அதன் போக்கை மாற்றிக்கொண்டே இருப்பார். 'கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய் தான் சேராதே’ என்றார். இந்த இடத்தில் ஒரு கல்லறைப்பூவைப்போல யோசியுங்களேன், அட என்ன நம் வாழ்க்கை என்ற மனநிலை தோன்றும். அதே கல்லறைப் பூக்களுக்கு எனர்ஜி டானிக் கொடுப்பது போல ‘கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா?’ என வரிகளை காதல் படத்திற்கு கொடுத்திருப்பார் அதே நாமு. கல்லறைப்பூவாக இருந்தால் என்ன? நீ கூந்தலை தேட வேண்டாம். வண்ணத்துப்பூச்சிகள் உன்னைத் தேடும் என்ற அந்த ஊக்கத்தை அவரால் தான் கொடுக்க முடியும்.
இந்த உருவகங்களை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்தும் அவர் பேசியுள்ளார். ‘ஒரு உருவகத்தை அடுத்த கட்டத்திற்கு எனது பாடல் வரிகளின் வழியாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். உதாரணமாக காதல் கொண்டேன் படத்தில் கல்லறை பூக்களுக்கு அந்தஸ்த்தே இல்லை என்றேன். அதுவே காதல் படத்தில் கல்லறை பூக்களையும் வண்ணத்துப் பூச்சிகள் தேடி வரும் என எழுதியிருந்தேன். மறுபடியும் கல்லறை பூக்களை குறித்து நான் எழுதுவேன். அதற்கான கதை வந்தால் நான் எழுதுவேன்’ என்றார்.
‘வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்’ என வெயிலை தொடர்ந்து ரசித்து ஆமோதித்த ஒரு கவிஞன். ’மழை மட்டுமா அழகு.. சுடும் வெயில்கூடத்தான் அழகு’ என அழுத்திச் சொன்ன பாடலாசிரியர். ’ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு’ என தந்தைக்குள் இருக்கும் தாயை கண்முன்னே கொண்டு வந்த நாமு, ’கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே’ என்ற இடத்தில் நம்மை அசர வைத்துவிடுவார்.
காதல் களிப்பு, காதல் தோல்வி, நட்பு, அம்மா, அப்பா, உறவுகள், மழை, வெயில் என நாமு தொடாத புள்ளியே இல்லை. தன் வார்த்தைகள் வழியே, காதலுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கவும் செய்வார், காதல் தோல்வியால் துவண்ட மனதுக்கு ஆறுதல் கூறவும் செய்வார். நீங்கள் எந்த மனநிலையில் தேடினாலும் உங்களுக்கான வார்த்தைகளை பாடல்களாக வைத்திருப்பவர் நாமு. தமிழ்ச் சினிமாத்துறையில் புயலென புகுந்து வீசி இன்று அமைதியாய் கடந்து சென்ற நாமுவின் பிறந்ததினம் இன்று. உடலால் மறைந்தாலும் எங்கோ ஒரு மூலையில், ஒரு தூர ஒலியாக நாமுவின் வரி பாடலாக கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது. இசை இருக்கும் வரை, மொழி இருக்கும் வரை நாமுவுக்கு இறப்பில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் நா.முத்துகுமார்.