அரக்கத்தனம் என்றால் அது இதுதானோ, அவன் இவன்தானோ என்றெண்ணும் அளவுக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவன் தான் பெற்ற பிள்ளையையே சுவரில் தலையை மோதவைத்துக் கொன்றிருக்கிறான். ஆந்திர மாநிலம் விஜியநகரம் மாவட்டம் ஜோதிமமிடிவாலசா எனும் கிராமத்தைச் சேர்ந்தவன் பிரசாத். இவனுடைய மனைவி லக்‌ஷ்மி. இவர்களுக்கு ஸ்ரீ, பிரவாணி என்று இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.


முதல் குழந்தை பிறந்த நாளிலிருந்தே லக்‌ஷ்மியுடன் சண்டை சச்சரவு என்றே பிரசாத் இருந்துள்ளான். பெண் பிள்ளை பிறந்ததுதான் அதற்குக் காரணம். இரண்டாவதாக ஆண் குழந்தை பிறக்கும் எல்லாம் சரியாகிவிடும் என்றே வன்முறையை சகித்துக் கொண்டு வாழ்ந்துவந்துள்ளார் லக்‌ஷ்மி. ஆனால், இரண்டாண்டுகளுக்கு முன்னதாக பிரவாணி பிறந்துள்ளார். அதுவும் பெண் குழந்தையாகப் பிறக்க, பிரசாத்தின் கொடூரம் இன்னும் உச்சம் தொட்டுள்ளது. பிரசாத்திடமிருந்து தன்னையும் தனது சின்னஞ்சிறு குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்வதே லக்‌ஷ்மிக்கு பெரும் பாடாக இருந்துள்ளது. அக்கம்பக்கத்தினருக்கும் பிரசாத்தின் கொடுமையைத் தட்டிக்கேட்கத் தவறிவிட்டனர். அவ்வப்போது சில பெண்கள் மட்டும் லக்‌ஷ்மிக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர்.  இந்நிலையில்தான், அந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. நேற்று கூலி வேலைக்குச் சென்று திரும்பிய பிரசாத் வழக்கம்போல் வீடு திரும்பியதுமே லக்‌ஷ்மியுடன் சண்டையைத் தொடங்கிவிட்டான். வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் தனது இரண்டாவது மகளை தூக்கி குழந்தையின் தலையை சுவரில் மோதவைத்துள்ளான். அப்போதும் அவனது ஆக்ரோஷம் தீரவில்லை மூத்த மகள் ஸ்ரீயையும் அதே பாணியில் அடித்துள்ளான். அதிர்ந்துபோன தாய் லக்‌ஷ்மி கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். குழந்தைகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அவர்கள் உதவினர். குழந்தை பிரவாணி இறந்துவிட ஸ்ரீ சிகிச்சையில் உள்ளது. இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பிரசாத்தைப் பிடிக்கும் வேட்டையில் இறங்கியுள்ளனர். 


கணவனின் மீது மனைவி லக்‌ஷ்மிதான் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரை லக்‌ஷ்மி 4 ஆண்டுகளுக்கு முன்னர் பிரசாத் வன்முறையைத் தொடங்கிய நாளிலேயே கொடுத்திருந்தால் இன்று இந்த நிலையில் இருந்திருக்கமாட்டார். பெண்கள் குடும்ப வன்முறையைப் பொறுக்க பொறுக்க இதுபோன்ற கொலைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும். லக்‌ஷ்மியின் பொறுப்பற்ற பொறுமை பிஞ்சுக் குழந்தையின் உயிரையும் பறித்துள்ளது. குடும்ப வன்முறை குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கும் வித்திட்டுள்ளது.


குறிப்பு : சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க 91502-50665 என்றபிரத்யேக செல்போன் எண் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, சென்னை ஆயிரம் விளக்கில் செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரும் இதில், இணைந்து செயல்படுகின்றனர்.