தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கு என்று பல வகையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்ததன் மூலம் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரம் என்ற அளவில் இருந்து தற்போது 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. ஓரிரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது 19-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.


இந்த புதிய உத்தரவின்படி, தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு இடையிலான பேருந்து போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று காலை முதல் சென்னையில் உள்ள கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரிக்கு மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கியது. அதே சமயத்தில் புதுச்சேரியைத் தவிர, பிற மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து சேவைக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் நேற்று வரை இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில், இன்று முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட உள்ளது. மேலும், கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.




கடந்த ஊரடங்கு உத்தரவின்போது, இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டு இருந்த கடைகள் 8 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டு இருந்தது. புதிய ஊரடங்கு விதிகளின்படி, இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டு இருந்த காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் என அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், டீக்கடைகள், பேக்கரிகள், நடைபாதை கடைகள், இனிப்பு, காரவகை, பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழக அரசால் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகளிலும் உடல் வெப்ப பரிசோதனை கருவி மூலம் வாடிக்கையாளர்களை பரிசோதிக்க வேண்டும். சானிடைசர் உபயோகிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.




இதுமட்டுமின்றி இன்று முதல் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத்தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்கூட்டியே அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் தெரிவிக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளின்படி, திருமண நிகழ்வுகளில் 50 சதவீதம் பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறுதிச்சடங்குகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். மேலும், வரையறுக்கப்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசதிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு பகுதிகளில் மருத்துவ அவசர சேவைகள், அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் தவிர பிற செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.


மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி அவசியம் இன்றி வெளியில் வருவதை தவிர்க்கவேண்டும் என்றும், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.