நடிகர் கமல்ஹாசனுடன் `விக்ரம்’ திரைப்படத்தின் மூலமாக இணைந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இயல்பிலேயே கமல் ஹாசன் ரசிகரான இவர், அவரது திரைப்படத்தை இயக்குவதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, `சர்கார்’ திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிரிஷ் கங்காதரன்  ஒளிப்பதிவு செய்துள்ளார்.


அண்மையில் 'விக்ரம்' படத்தின் மேக்கிங் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலானது. அண்மையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் மேக்கிங் காட்சிகளும்,வரும் ஜூன் 3 அன்று `விக்ரம்’ திரைப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்த நிலையில் இந்தப் படம் பற்றி பேசியுள்ள லோகேஷ் கனகராஜ், “ `விக்ரம்’100  சதவிகிதம் என்னுடைய திரைப்படமாக இருக்கும். திரைப்படத்திற்கு டீசர், ட்ரைலர், இசை வெளியீட்டு விழா என அனைத்தும் இருக்கும்” என்று பேசியிருந்தார். இந்நிலையில் படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வாங்கியுள்ளது. 






இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள ரெட் ஜெயண்ட், உலக நாயகன் கமலோடு கைகோப்பது மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு ரெட் ஜெயண்ட் சார்பாக மிகப்பெரிய அறிவிப்பை புதன்கிழமை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார் உதயநிதி. அதன்படி அந்த அறிவிப்பு விக்ரமின் தியேட்டர் ரிலீஸ் என தெரியவந்துள்ளது.


இந்தியில் ஹிட்டான ‘ஆர்டிக்கிள் 15’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். அடுத்து, உதயநிதி ஸ்டாலின் தனது சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் மூலம் மாரி செல்வராஜுடன் மாமன்னன் படத்தில் கைகோத்துள்ளார். இப்படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங்கும் வேகமாக நடந்து வருகிறது