Rashmika Mandanna’s Deepfake Video: தனது முகத்தை மார்ஃபிங் செய்து வைரலாகும் வீடியோவை பார்த்து மிகவும் வேதனைப்படுவதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். 


கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையாக உருவெடுத்தவர் ராஷ்மிகா மந்தனா. புஷ்பா படத்தில் நடித்து முன்னணி நடிகையாக இவர் உயர்ந்தார். தொடர்ந்து தெலுங்கு, தமிழ், கன்னடம் மொழி படங்களில் நடித்து வரும் முன்னணி ஹீரோக்களின் ஹீரோயினாக இருந்து வருகிறார். இந்த வகையில் கடந்த சில நாட்களாக அறைகுறை ஆடையுடன் ராஷ்மிகா மந்தனா இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. 


ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. ஆனால், இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ வளர்ந்து வரும் AI செயற்கை நுண்ணறிவு மூலம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்றும், ஒரிஜினல் வீடியோவில் நடிகை ஷாரா படேல் இருப்பதாகவும், அதை மாற்றி ராஷ்மிகாவின் முகத்தை தொழில்நுட்பம் மூலம் பொருத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. 






இந்த நிலையில் தனது முகத்தை மார்ஃபிங் செய்து இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவுக்கு ராஷ்மிகா மந்தனா, பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவால் தான் மிகவும் வேதனைப்படுவதாகவும், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதால், ஒவ்வொருவருக்கும் ஏற்படும் தீங்கு பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், ஒரு பெண்ணாகவும், ஒரு நடிகையாகவும் இருக்கும் தனது பாதுகாப்புக்கு ஆதரவு கொடுக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ராஷ்மிகா மந்தானா கூறியுள்ளார். 


தான் கல்லூரி அல்லது பள்ளி படிக்கும்போது இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால், அதை எப்படி சமாளிப்பது என்பதை தன்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார். இதுபோன்ற அடையாளத் திருட்டுகளால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதற்கு முன்பு சமூகத்தை விரைந்து கவனிக்க வேண்டும் என்றும் ராஷ்மிகா மந்தனா குறிப்பிட்டுள்ளார். 






ராஷ்மிகாவின் மார்ஃபிங் வீடியோவை பார்த்த அமிதாப் பச்சன் முன்னதாக கண்டத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் மட்டுமின்றி திரைப் பிரபலங்களும் ராஷ்மிகாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.