கன்னட சினிமாவில் கால் பதித்து அதன் பின் பக்கத்து மாநிலத்தின் டோலிவுட் சினிமாவிற்கு பறந்து சென்றவர் ராஷ்மிகா மந்தனா. விஜய தேவரகொண்டா முதல் விஜய் வரை பல பெரிய நட்சத்திரங்களுக்கு ஜோடியாக இவர் நடித்து வருகிறார். இவர் தன் சினிமா வாழ்க்கையை துவங்கிய காலகட்டத்தில், இவரை பல இளைஞர்கள் “நேஷனல் க்ரஷ்” என்ற பட்டத்தோடு சேர்த்து தங்களின் மனதையும் ராஷ்மிகாவிற்கு சமர்பித்தனர்.


ராஷ்மிகாவும் முன்னணி நாயகியாக வளர்ந்து வரும் சமயத்தில்,அவரின் சில நடைமுறையையும் உடல் மொழியையும் பலர் ட்ரோல் செய்து வந்தனர். பொதுவாக பாசிட்டிவான விஷயங்களை விட, நெகட்டிவான விஷயங்கள்தான் சீக்கரமாக பரவும் என்று சொல்வார்கள். 


அதற்கு ஏற்றவாறு, ராஷ்மிகாவின் விஷயத்திலும், இது நடந்து அந்த கருத்தை நிரூபித்தது. எவ்வளவுக்கு எவ்வளவு பிரபலமாக இருந்தாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு கஷ்டங்களையும் சந்தித்தார் ராஷ். இவர் என்ன செய்தாலும் என்ன சொன்னாலும், விடாது கருப்பு போல், ட்ரோல்களும் நெகட்டிவிட்டியும் இவரின் வாழ்க்கையை சூழ்ந்தது.




முன்னதாக ரக்‌ஷித் ஷெட்டியுடன் காதல் கொண்ட இவர், அக்காதலை திருமணம் வரை எடுத்து சென்று, அந்த உறவை முறித்த விஷயமும் இவருக்கு அவப்பெயரை கொடுத்தது. சினிமாவில் மென்மேலும் வாய்ப்பு கிடைத்தது என்பதற்காக, திருமணத்தை நிறுத்தியவர் ராஷ்மிகா என்ற கருத்தும் நிலவி வந்தது. ஒருகட்டத்தில், இவை அனைத்தையும் சகித்து கொள்ள முடியாத ராஷ்மிகா, வெறுப்பை உமிழும் அளவிற்கு என்ன செய்து விட்டேன்... என பெரிய ஒரு கட்டுரையை தனி இன்ஸ்டா போஸ்டாக  பதிவிட்டு அவரின் மனக்கஷ்டத்தை மொத்தமாக கொட்டித்தீர்த்தார்.






பின்னர், ரக்‌ஷித் ஷெட்டியுடன் நடித்த படத்தை பற்றி பேசிய இவர், அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை சொல்ல மறுத்தார்.இதனால், அவரது படம் கன்னடத்தில் தடை செய்யப்படும் என்று கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்தனர்.


சமீபத்தில் ரக்‌ஷித் ஷெட்டியின் நெருங்கிய நண்பர் மற்றும் காந்தாரா படத்தின் ஹீரோவான ரிஷப் ஷெட்டி, ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அவரிடம்,  சமந்தா, ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோரில் யாருடன் பணிபுரிய விரும்புகிறீர்கள் என்ற கேள்வியெழுப்பப்பட்டது. இந்த பிரபலங்களுடம் நான் பணியாற்ற விரும்பவில்லை என ரிஷப் பதில் தெரிவித்திருந்தார். ஆனால் சாய் பல்லவி மற்றும் சமந்தாவின் வேலையைப் பாராட்டியிருந்தார். ராஷ்மிகாவின் பெயரை தவிர்த்ததன் மூலம் அவரது கருத்துக்கு ரிஷப் ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டது. 




தற்போது மீண்டும் பேட்டி கொடுத்துள்ள ராஷ்மிகா,  “நான் நானாக இருக்கிறேன். இதுதான் என்னுடைய பண்பு. அனைவரும் என்னை பார்க்கிறார்கள் என்பதற்காக என்னால் கேமராவை தாண்டி நடிக்க முடியாது. என்னை போல் இருப்பவர்களை பார்க்கும் போது எனக்கு மனநிறைவாக உள்ளது.” என்று பேசியுள்ளார்.


அதுபோக, மேடை நிகழ்ச்சி ஒன்றில் ராஷ்மிகா பேசும்போது, "எனக்கு சினிமா பின்னணி கிடையாது. நானாகவே வளர்ந்து இங்கு நிற்கிறேன். என் வீட்டில் உள்ள குடும்பத்தினருடன் நான் போராடியுள்ளேன். ஒரு பெண்ணாக சினிமா துறையில் நீடிப்பது மிகவும் கஷ்டமான விஷயம். "


எவ்வளவு இன்னல்கள் வந்தாலும், எதையும் தாங்கும் அஞ்சா நெஞ்சம் போல் பளிச் பளிச் பதிலடி கொடுத்து வருகிறார் ராஷ்மிகா. எதிர்மறை கருத்துக்கள் அனைத்தையும் ஓரமாக தள்ளிவிட்டு, புஷ்பா முதல் பாகத்தின் ரஷ்யா ரிலீஸிற்காக, அந்நாட்டிற்கு  அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் சுகுமாருடன் சென்றுள்ளார்.